முள்வழிச் சாலை
அந்தரத்தில் செருப்பில்லாத
பாதங்களோடு நடந்த போது
சுருக்கென்று குத்திய முள்ளைப்
பத்திரமாக
சதையிடுக்கில் சேமித்து வைத்துள்ளேன்
பூமியின் அங்கும் இங்கும்
நடைபோடும் செருப்பு
ஆயிரம் முட்களைச் சேமித்து
வைத்துள்ளதாய்ச் சொல்கிறது
முள்மரத்தின் சேமிப்புக்
கணக்கிலிருக்கும் முட்களுக்கும்
அவ்வபோது உதிர்ந்த முட்களுக்கும்
கணக்கிருக்காது
நினைவில் தங்கி வெளிவராத
முட்களும் இருக்கின்றன
பாதைகள் நீளும் வரை பயணங்களோடு
முட்களும் இருக்கின்றன
முட்களைக் காலுக்கு மெத்தையெனக்
கொள்ளும்
ஆன்மிக அனுபவம் இன்னும் சித்திக்கவில்லை
கண்ணில் படும் முட்களைத்
தூர எறிந்து விட்டு நகர்ந்தாலும்
காற்றில் பறந்து வரும் முட்கள்
சாலைகளில் நிறைகின்றன
ஒன்றிரண்டு முள் மரங்கள்
அப்போது சாலைகளில் இருந்தன
இப்போது முள் மரங்களின் ஊடாகச்
சாலைகள் இருக்கின்றன
சாலையோரங்களில் நல்ல மரங்களை
நட ஆளில்லாத போது
இரு மருங்கிலும் முள் மரங்களின்
மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன
முள்ளில் கிழிபட்டபடி வீசிக்
கொண்டிருக்கும் புழுதிக் காற்று
திரளும் மேங்களை விரட்டி
அடித்தபடி இருக்கின்றன
கால வெளியில் முட்கள் நிறைந்த
பாதையைக் கடக்க
கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள்
பழகிக் கொள்கிறார்கள்
ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும்
ஒரு முள்
சதைப்பித்தில் ஞாபகார்த்தமாய்
ஏறிக் கொள்கிறது
*****
No comments:
Post a Comment