20 Dec 2021

‘ஜெய் பீம்’ – முடக்கப்பட்ட உரையாடல்

‘ஜெய் பீம்’ – முடக்கப்பட்ட உரையாடல்

            ‘ஜெய் பீம்’ திரைப்படத்தைக் காத்திரமான அரசியல் பேசிய சமீப காலத் தமிழ்த் திரைப்படமாகக் குறிப்பிடலாம். ஒடுக்கப்பட்டோரின் வலியை இந்த அளவுக்கு வலியோடு பேசிய முதல் தமிழ்த் திரைப்படமாகவும் அதைக் கொள்ளலாம். ஆனால் ‘ஜெய் பீம்’ தமிழ்த் திரையுலகில் எழுப்பவிருந்த நியாயமான உரையாடல் முடக்கப்பட்ட நிலையை அடைந்திருக்கிறது.

            ஓர் அரசியல் கட்சி அவ்வளவு உக்கிரத்தோடு இத்திரைப்படத்தை எதிர்க்க நியாயமான காரணங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இப்படத்தோடு ஏதோ சில வகையில் தொடர்புடைய எழுத்தாளர் ஒருவரும் இத்திரைப்படத்தை உரிய முற்போக்கான காரணங்கள் இன்றி பிற்போக்குத் தனத்தோடு இத்திரைப்படத்தை ஒதுக்கி வைப்பது போல நடந்து கொள்வதும் ஏற்புடையதாகத் தெரியவில்லை.

            ‘ஜெய் பீம்’ படத்தை ஒரு வகையில் பயோபிக் படமாகவும் குறிப்பிடலாம். தலைவர்களுக்கும் சமூகத்தின் புகழ்பெற்ற ஆளுமைகளுக்கும் வெளிவந்திருக்கும் பயோபிக்கிலிருந்து மாறுபட்டு ஓர் எளிய மனிதருக்கு வெளிவந்திருக்கும் பயோபிக்காக இத்திரைப்படத்தைக் குறிப்பிட இயலும். வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் தற்போது சமூகச் செயல்பாட்டாளராகவும் இயங்கிக் கொண்டிருக்கும் சந்துரு குறித்த பயோபிக் எனவும் இத்திரைப்படத்தைக் குறிப்பிடலாம்.

            வழக்கறிஞராக சந்துரு எதிர்கொண்ட நெருக்கடிகள் எத்தனை வலி நிறைந்ததாக இருந்திருக்கும் என்பதை இத்திரைப்படம் எதிர்கொண்ட நெருக்கடிகளிலிருந்து புரிந்து கொள்ளலாம். தமிழில் அரசியல் படங்கள் வெளிவராமல் போனதற்குக் காரணம் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளே என்பதையும் இத்திரைப்படத்திற்கு உண்டான எதிர்ப்புகளிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

            அண்மைக் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களை முன்னெடுக்கும் போராட்டங்களை இவ்வளவு நேரத்தியாகச் சித்தரிக்கும் படங்கள் வெளிவந்ததில்லை எனலாம். ஒரு நேர்த்தியான கலைப்படத்திற்கு இணையாக ‘ஜெய் பீம்’ திரைப்படத்தைச் சுட்டிக் காட்டுவதில் சில தயக்கங்கள் இருந்தாலும் ஒரு வணிக ரீதியான படத்தில் இந்த அளவுக்கு அரசியல் பேசும் கலைத்தன்மையை எதிர்பார்க்க முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகிறது.

            ‘ஜெய் பீம்’ படத்தில் நாயகனை ஆராதிக்கும் பாடல்கள் இல்லை. நாயகியர்களைக் கவர்ச்சி உடையில் ஆட விடும் குத்தாட்ட பாடல்கள் இல்லை. ஹீரோயிச சாகசங்களும் இல்லை. கதை நாயகனுக்குக் காதலியும் இல்லை. மிக இயல்பான சித்தரிப்புகள் மூலம் உண்மைக்கு நெருக்கமாகவும் எதார்த்தத்திற்கு அணுக்கமாகவும் இத்திரைப்படம் நகர்கிறது.

            அரச பயங்கரவாதத்தின் கோர முகத்தைப் பொதுவெளிக்குக் காட்சிப்படுத்திக் காட்டிய விதத்தில் ‘விசாரணை’ என்ற திரைப்படத்திற்கு அடுத்தப்படியாக ‘ஜெய் பீம்’ திரைப்படமும் ஒரு முக்கியமான திரைப்படமாகும். எளியோர்களின் வலிகளும் வேதனைகளும் பதிவாகியிருந்து ‘மேற்குத் தொடர்ச்சிமலை’ என்ற திரைப்படத்தைப் போல இத்திரைப்படமும் பழங்குடியினரின் வாழ்வியல் போராட்டங்களை இத்திரைப்படம் வலுவாகக் காட்சிப்படுத்துகிறது.

            இந்தியாவின் வர்க்கம் என்பது சாதி என்பதையும், வர்க்க வேறுபாடு என்பது சாதிய வேறுபாடு என்பதையும் இத்திரைப்படம் பல காட்சி அடுக்குகளின் வழியாகக் காட்டுகிறது.

            கதை நாயகருக்கென கதை நாயகி தேவைப்படாத, குத்தாட்டம் தேவைப்படாத, நாயக பிம்பம் மிகையாக மாறாத ஒரு திரைப்படத்தைத் தயாரித்துக் காட்சிப்படுத்திய விதத்தில் இத்திரைப்படத்தைத் தயாரித்த சூர்யா மற்றும் ஜோதிகாவும் திரைப்படத்தை இயக்கிய த.செ.ஞானவேலும் பாராட்டிற்குரியவர்கள்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...