மேலுலக நியதிகள்
பூவுலகில் காதலர்களாக இருந்தவர்கள்
மேலுலகில் சம்பந்தம் இல்லாதவர்களாக
ஆகி விடுகிறார்கள்
ஆணவக்கொலை செய்தவர்கள் மன்னிக்கப்பட்டு
விடுகிறார்கள்
வன்புணர்வுக்கு ஆளாகியவள்
அதை நிகழ்த்தியவனுக்கு
உல்லாச காதலியாக்கப் படுகிறாள்
பூவுலகின் கொடுமைகள் எதுவும்
மேலுலகில் ஏற்கப்படுவதில்லை
கொடுமை செய்தவர்களுக்கு அங்கு
சுகபோகம் காத்திருக்கிறது
கொடுமைக்கு உள்ளானவர்கள்
பணிவிடை செய்ய ஏவப்படுகிறார்கள்
மனதின் உணர்வுகளை மறைக்காதவர்களுக்கும்
மட்டுப்படுத்தாதவர்களுக்கும்
மேலுலகம் மரியாதை செய்கிறது
என்கிறார்கள்
ஜனித்த பிறவியை இஷ்டம் போல்
வாழ்பவர்கள்
மேலுலகில் வணங்கப்படுவார்கள்
என்கிறார்கள்
ஒழுங்கான வாழ்க்கை வாழ்ந்தவர்க்கு
எல்லாம்
சவுக்கடியும் சாணிப்பாலும்
எண்ணெய் கொப்பரையும்தான் என்கிறார்கள்
கீழும் மேலும் முரண் சொற்கள்
என்பதைப் போல
மேலுலக நியதிகள் வித்தியாசமானவை
என்கிறார்கள்
அது சரி அப்படியே இருக்கட்டும்
அதனாலென்ன
செத்த பின் எது நடந்தால்
என்ன
செத்த பின் நடப்பதைச் செத்த
பின் அறிந்து கொண்டால் என்ன
செய்யும் பாவங்களுக்குச்
செத்த பின் சொர்க்கமாகவே இருக்கட்டும்
பூவுலகில் தண்டனையைத் தடுக்க
ஏன் வக்காலத்துத் தேடி ஓடுகிறாய்
*****
No comments:
Post a Comment