12 Dec 2021

‘அண்ணாத்தே’ காட்டும் குறியீடுகள்

‘அண்ணாத்தே’ காட்டும் குறியீடுகள்

            ரஜினியின் ‘அண்ணாத்தே’ படம் அவர் அரசியலின்று திரும்பிய வேறொரு திருப்பு முனையைக் காட்டுகிறது. அரசியலிலிருந்து திரும்பிக் குடும்பப்பாங்கான விசயங்களில் கவனம் செலுத்த விழையும் அவரது உள்ளர்த்தத்தையும் இப்படம் எடுத்துக் காட்டுகிறது. ரஜினி ஒரு குடும்பப்பாங்கான மனிதர். அதற்கேற்ப இப்படமும் அமைகிறது.

            ரஜினியின் ‘அண்ணாத்தே’ அவரது வசூல் ரீதியான பட வரிசையில் அமையக் கூடியது. இதே பாணியிலான அவரது கலையம்சம் நிறைந்த படமாக ‘முள்ளும் மலரும்’ படத்தைக் குறிப்பிடலாம். இவ்விரு படங்களும் கையாண்டிருப்பது அண்ணன் – தங்கைப் பாசம் குறித்த மையத்தைத்தான். ‘முள்ளும் மலரும்’ படம் அதை இயல்பாகவும் எதார்த்தமாகவும் கையாண்டிருக்கும். ‘அண்ணாத்தே’ வணிக தளத்திற்குரிய மசாலா தன்மையுடன் கையாண்டிருக்கிறது.

            ‘முள்ளும் மலரும்’, ‘அண்ணாத்தே’ ஆகிய இரு படங்களிலும் ரஜினிக்குப் பாசம் கொண்ட தங்கைகள் அமைகிறார்கள். தங்கைகள் தங்களது மண வாழ்வைத் தேர்ந்தெடுப்பதில் ரஜினி காட்டும் அணுமுறையால் இரு திரைப்படங்களும் வேறுபடுகின்றன. இரு படங்களிலும் முரட்டு ரஜினியை நீங்கள் பார்க்க முடியும். இரண்டிலும் பாசத்தை விட்டுக் கொடுக்காத ரஜினியும் இருக்கிறார்கள். ‘முள்ளும் மலரும்’ படத்தில் வீம்பு காட்டும் ரஜினி ‘அண்ணாத்தே’ படத்தில் இளக்கமாக இருக்கிறார்.

            இயல்பான ஒரு நடிகர் வளர்ந்து சூப்பர் நடிகராக ஆகும் பட்சத்தில் ‘முள்ளும் மலரும்’ எப்படி மாறும் என்பதைத்தான் ‘அண்ணாத்தே’ காட்டுகிறது. தவிரவும் ‘அண்ணாத்தே’ கையாண்டிருப்பது புதுமையான கதைக்களமும் அன்று. தமிழ்த் திரையுலகம் தனக்கே டெம்ப்ளேட் வடிவமாக வைத்திருக்கும் அண்ணன் – தங்கைப் பாசத்தின் ‘பாசமலர்’ வடிவம்தான்.

            சிவாஜி – சாவித்திரியின் பாசமலர் கதையைப் பல்வேறு விதமாக பட்டி டிங்கரிங் பார்த்து விஜய், அஜித் என்று பல நடிகர்கள் நடித்து விட்டார்கள். விஜய்யின் ‘சிவகாசி’ என்ற திரைப்படத்தையும், அஜித்தின் ‘வேதாளம்’ என்ற திரைப்படத்தையும் உதாரணங்களாகச் சொல்ல முடியும். தனக்கு முந்தியும் பிந்தியும் வெற்றிகரமாகத் திரையுலக நாயகர்கள் பயன்படுத்திய அதே உத்தியைப் பயன்படுத்தி ரஜினியும் அந்தப் பட்டியலில் தற்போது மீண்டும் இணைந்திருக்கிறார்.

            ‘அண்ணாத்தே’ திரைப்படத்தை இயக்கியிருக்கும் சிவா இதற்கு முன்பு அஜித்தை வைத்து இயக்கியிருக்கும் ‘வேதாளம்’ என்ற திரைப்படத்திலிருந்தே ‘அண்ணாத்தே’ திரைப்படம் வேறுபட்டதல்ல. அவ்விரு திரைப்படத்துக்கும் பல ஒற்றுமைகளைச் சொல்ல முடியும். ‘வேதாளம்’ என்ற திரைப்படத்தில் வளர்ப்புத் தங்கையைப் பயன்படுத்தியிருந்தால், ‘அண்ணாத்தே’ திரைப்படத்தில் உடன்பிறந்த தங்கையைப் பயன்படுத்தியிருக்கிறார் என்று மிகச் சிறிய பொருப்படுத்த இயலாத வேற்றுமைகளையே இவ்விரு திரைப்படங்களுக்கும் இடையே குறிப்பிட முடியும். மணமான தங்கை, மணமாகாத தங்கை என்று வேறு சில வேறுபாடுகளையும் இவ்விரு திரைப்படங்களுக்கும் இடையே குறிப்பிட இயலும். இரண்டின் கதைக்களங்களிலும் கல்கத்தா முக்கிய பங்கை வகிக்கிறது என்பதில் கவனத்திற்கு உரியது.

            ‘அண்ணாத்தே’ திரைப்படத்தில் காட்டப்படும் ரஜினி சாதிய மேலடுக்கைச் சார்ந்தவர். பண்ணையார், மிரசுதாரர், நாட்டாமை என்ற வகையில் வரக் கூடியவர். அத்துடன் மைனர் ரேஞ்சில் கட்டிளங் காளையாக வலம் வரக் கூடியவர். அதே நேரத்தில் நியாத்திற்காகவும் பாசத்திற்காகவும் எதையும் செய்யக் கூடியவர். 

            அண்ணாத்தே திரைப்படம் ஒரு சில விசயங்களுக்காக மனதைக் கவர்கிறது. திருமணம் நடைபெறப் போகும் நிலையில் ஓடிப் போகும் தங்கையை ஆணவக்கொலை செய்ய ரஜினி மறுக்கிறார். படத்தில் ஆணவக்கொலை நிகழ்த்தக் கூடிய சூழ்நிலைகள் உருவாவதையும் இயக்குநர் துல்லியமாகக் காட்டுகிறார். தங்கை மேல் கொண்ட பாசம் அதைத் தடுக்கிறது. தங்கையை இழுத்து வந்து தமது விருப்பப்படித் திருமணம் செய்விப்பதையும் ரஜினி விரும்பவில்லை. இந்த இடத்தில்தான் அந்தப் படம் எதார்த்தத்திலிருந்தும் விலகுகிறது. ரஜினி திரைப்படத்தில் எதை விரும்பவில்லையோ அதுதான் இன்றைய சமூகத்தில் பெரும்பாலும் எதார்த்தமாக நடக்கிறது.

            படத்தின் பிற்பாதியில் ரஜினி சிக்கலில் சிக்கிக் கொண்ட தங்கைக்காக மறைமுகமாக தமக்கே உரிய ஹீரோயிசத்தில் இறங்குகிறார். அதெல்லாம் நம்ப முடியாத ஹீரோயிசங்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

            படத்தின்படி ரஜினி இருப்பது தமிழ் நிலத்தில். அவர் ஹீரோயிசங்களை நிகழ்த்துவதோ கல்கத்தா போன்ற அயல் நிலத்தில். அவர் நினைத்தால் குண்டுகளை வைக்க முடிகிறது. கார்களைத் தீயிலிட்டுக் கொளுத்த முடிகிறது. கட்டிடங்களின் மேல் நின்று கொண்டு மனிதர்களைத் தலைகீழாகப் பந்தாட முடிகிறது. அதுவும் இதெல்லாம் மொழி புரியாத இன்னொரு நிலத்தில்.

            ‘அண்ணாத்தே’ படம் ரஜினியின் வணிகத் தளத்திற்காக எடுக்கப்பட்ட படம்தான் என்றாலும் அது வெளிப்படுத்தும் கூர்மையான பார்வைகளை வெளிப்படுத்துவதில் தவறில்லை. முற்றிலும் குடும்பத்தை மையப்படுத்திய ஒரு நோக்கிற்கு ரஜினி செல்கிறார். அத்துடன் தனியராக அதாவது ஒரு ஹீரோவாக இந்தச் சமூகத்திற்கு எவ்வளவு செய்ய முடியுமோ அதைச் செய்ய சொல்கிறார். மக்களை ஒருங்கிணைத்துச் செய்வதில் அவர் கவனம் காட்டவில்லை என்பதை இத்திரைப்படம் ஒரு வகையில் குறியீடாகவும் சொல்ல முனைகிறது. வருங்காலத்தில் வரப்போகும் ரஜினியின் திரைப்படங்களிலும் நாம் இதையே தொடர்ந்து எதிர்பார்க்கலாம். அதாவது நடைமுறைக்கு உதவாத கதைக்கு உதவும் ஹீரோயிசத்தை.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...