அன்றை நோக்கித் திரும்பும் காலம்
சரியாகச் சொல்வதென்றால் 585 நாட்கள் கடந்து விட்டன. கொரோனா அச்சுறுத்தல்
காரணமாகப் பள்ளிகள் மூடிக் கிடந்தன. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அவ்வபோது
திறந்து திறந்து மூடப்பட்டன. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் முழுமையாக ஒன்றரை ஆண்டு
காலத்திற்கும் மேலாக மூடிக் கிடந்தன.
பள்ளித் திறப்புக்கு ஆயத்தம் செய்யும் வகையில் நவம்பர் 1 நாள்
குறிக்கப்பட்டது. தமிழ்நாட்டைப் பொருத்த வரையில் நவம்பர், டிசம்பர் ஆகிய இரு மாதங்களும்
மழைக்கானவை. புயலுக்கானவை என்று சொன்னாலும் பொருத்தமானதுதான். அக்டோபர் மாதத்தின் நடுவிலிருந்தே
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை துவங்கி விடும்.
வடகிழக்குப் பருவமழையின் தனித்த அம்சம் மழையோடு அது புயலையும்
கொண்டு வருவதுதான். பல நேரங்களில் வடகிழக்குப் பருவமழை என்பது புயல் மழையாகத்தான் இருக்கும்.
அதுவும் அண்மைக் காலங்களில் வடகிழக்குப் பருவமழை ஏகப்பட்ட புயல்களைக் கொண்டு வருகிறது.
கொரோனா விடுமுறையை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து திட்டமிட்டபடி
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நவம்பர் 1, 2021 அன்று பள்ளியைத் திறக்க முடியவில்லை.
கனமழையால் பல மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டியதாகி விட்டது. நிச்சயம்
செய்யப்பட்ட திருமணத்தை மறுநாள் தள்ள வைப்பது போன்ற நிலைதான்.
மறுநாளாவது பள்ளியைத் திறக்க முடியுமா என்று பார்த்தால் கனமழையின்
நிழலைப் போல மிதமான மழை பொழிந்து கொண்டிருந்தது. கனமழைக்கான விடுமுறையை மித மழைக்கு
எப்படி விடுவது? ஆனால் மழை பொழிந்து கொண்டிருக்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப்படும் பள்ளிக்கு மழைமேகமும்
வருகை தர விரும்புவதைப் போல வானம் எந்நேரமும் மழைத்துளிகளால் ஆசிர்வதித்துக் கொண்டே
இருந்தது. மறுநாள் ஆசிரியர்கள் மழையில் மழையாகப் பிள்ளைகளின் வருகைக்காக பள்ளியில்
காத்திருந்தார்கள். பிள்ளைகள் ஒன்று கூட வரவில்லை. மழை பொழிந்து கொண்டிருந்ததால் இன்றும்
விடுமுறையாக இருக்கலாம் என்று பிள்ளைகளும் பெற்றோர்களுமாய் ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள்.
பிள்ளைகள் வராத பள்ளியில் எவ்வளவு நேரம் தனிமையாக உட்கார்ந்திருப்பது
என்று ஆசிரியர்கள் வீடு வீடாகச் செல்வதென்று முடிவெடுத்து வீடு வீடாகச் செல்ல ஆரம்பித்ததும்
பிள்ளைகள் ஆர்வமாய்ப் பள்ளியை நோக்கி வர ஆரம்பித்தார்கள். இதைப் பார்க்க எனக்கு அந்தக்
கால நினைவுகள் சூழ்ந்தன. அப்போது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது சாமான்யமில்லை.
பள்ளிக்குச் செல்ல அடம் பிடிக்கும் குழந்தைகள் அதிகம் இருந்த காலம். அடம் பிடிப்பதோடு
ஒளிந்து கொள்ளக் கூடிய குழந்தைகளும் நிறைய இருந்தார்கள்.
ஆனால் அப்போதிருந்த ஆசிரியர்கள் விட மாட்டார்கள். சைக்கிளை எடுத்துக்
கொண்டு வீடு வீடாக வந்து விடுவார்கள். கேரியரில் வைத்து பிள்ளைகளைப் பள்ளிக்குக் கொண்டு
போகாமல் விட மாட்டார்கள். அப்படி ஒரு காலம் திரும்பி விட்டதோ என வீடு வீடாக வந்த ஆசிரியர்களைப்
பார்த்த போது எனக்குத் தோன்றியது.
ஆனால் நிலைமை முன்பு போல் அவ்வளவு மோசமில்லை. பிள்ளைகள் பள்ளி
செல்ல ஆர்வமாகத்தான் இருக்கிறார்கள். சூழ்நிலைதான் மோசமாக இருக்கிறது. நீண்ட காலத்திற்குப்
பின் பள்ளியை மீண்டும் திறக்க திட்டமிடும் போது கனமழைக்காலத்தையும் கொஞ்சம் கருத்தில்
கொண்டிருக்கலாமோ என்னவோ!
*****
No comments:
Post a Comment