24 Nov 2021

அமெரிக்கமயத்தின் பின்புலங்கள்

அமெரிக்கமயத்தின் பின்புலங்கள்

            ஹாலிவுட் திரைகளில் ஸோம்பிக்கள், ஏலியன்கள், புதுப்புது வைரஸ்கள், இன்னபிற கிருமிகள், டிரான்ஸ்பார்மர்கள், பிரிடேட்டர்கள், புதுப்போது போர்கள், வேற்றுக் கிரகத்திலிருந்து வரும் பல்வேறு ஆபத்துகள் எல்லாம் அமெரிக்காவைக் குறி வைத்துத் தாக்குவதன் ரகசியம் வெகுநாட்கள் கழித்துதான் எனக்குப் புரிந்தது. அமெரிக்கா அடிக்கடி பிற நாடுகளைக் குறி வைத்துத் தாக்குவதன் ஊழ்வினைப் பயனாக அமெரிக்கா இப்படி தன்னாட்டுத் திரைகளில் குறி வைத்துத் தாக்கப்படுகிறது.

            ஹாலிவுட் திரைகளில் இன்னொன்றும் செய்து விடுகிறார்கள். அமெரிக்காவுக்கு நேரிடும் தாக்குதல்களை உலகுக்கே நேரிடும் பாதிப்புகளாகச் சித்தரித்து விடுகிறார்கள். உலகில் எந்தப் பாதிப்பு நடந்தாலும் அந்தப் பாதிப்பைப் போக்க அமெரிக்காவிலிருந்துதான் ஒருவர் வர வேண்டும் என்பதைப் போலவும் காட்டுகிறார்கள். கிட்டத்தட்ட உலகின் ரட்சகராக அமெரிக்கர் ஒருவர்தான் இருக்க முடியும் என்ற திட்டவட்டமான பிம்பம் கட்டுமானம் அது.

            அமெரிக்காதான் உலகைக் காப்பாற்ற முடியுமா என்றால் அமெரிக்காவும் காப்பாற்ற முடியும் என்று சொல்லலாம். வேறு ஒரு வகையில் அமெரிக்கா தனது எரிபொருள் பயன்பாடு, அளவுக்கதிமான நுகர்வு கலாச்சாரத்தைக் கட்டுபடுத்திக் கொள்வதன் மூலமும் உலகிற்கு உதவ முடியும். குறிப்பாக அணு ஆயுதங்கள் இருப்பதாகச் சொல்லி பிற நாடுகள் மீது படையெடுப்பதை நிறுத்தினால் அது பெரும் புண்ணியமாகப் போகும்.

இன்று உலகெங்கும் விவசாயம், உணவுப் பதப்படுத்துதலில் அதிகரித்திருக்கும் ரசாயனப் பயன்பாடு என்பது அமெரிக்கா ஒவ்வொரு நாடாகப் போட்ட விதைகள்தான். அந்த விதைகள் ஒவ்வொன்றும் வளர்ந்து மாபெரும் விருட்சங்களாக நிற்கின்றன. செயற்கையான வாழ்க்கை முறைக்கு முன்னெடுத்த பிராச்சாரங்களையும் முன்னெடுப்புகளையும் அமெரிக்கா இனி இயற்கையான வாழ்க்கை முறைக்கு முன்னெடுக்க வேண்டும். அப்படி முன்னெடுக்க அமெரிக்கா நிரம்ப யோசிக்கும். அமெரிக்காவின் பொருளாதாரமே இது போன்ற ரசாயனங்களிலும் ஆயுதத் தயாரிப்புகளிலும்தானே இருக்கிறது.

            அமெரிக்கா சில திட்டவட்டமான போக்குகளை உலகிற்குப் போதித்து வருகிறது. அதை உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் துணை அமைப்புகள் மூலமாக உலகமெங்கும் பரப்பி வருகிறது. ஒவ்வொரு நாடும் தனித்த கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும் கொண்டது. அத்தனித்தன்மையோடு இருக்க ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமையும் அதிகாரமும் இருக்கிறது என்பதால் அமெரிக்கா இது போன்ற விசயங்களில் எவ்வளவோ பக்குவமாக நடந்து கொள்ளலாம்.

            இப்படி அமெரிக்காவுக்கு உலக அளவில் பிரச்சனைகள் நேரிடாமல் இருக்க நிறைய சொல்லலாம். ஆனால் பிரச்சனை ஒன்று ஏற்படாவிட்டால் ஊரில் இருக்கும் நாட்டாமைக்கு என்ன மதிப்பிருக்கும்? நாட்டாமை இருப்பது ஊருக்குத் தெரிய வேண்டும் என்றால் ஒரு பிரச்சனை வேண்டியத்தானே இருக்கிறது. அப்படித்தான் அமெரிக்க விசயமும். அமெரிக்கா உலக நாட்டாமை என்பதால் உலகின் அதன் இருப்பு தெரிய ஒவ்வொரு நாடுகளிலும் பிரச்சனைகள் இருப்பது அவசியமாகிறது.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...