வானம் போல வியாபித்திருந்த நீர்
ஆற்றில் ஊற்று தோன்றி சேந்திக்
குடித்த நீர்
ஆற்று நீர் அடித்துச் செல்லாத
கிணற்று நீரை
தாவணிப் பெண்டிர் குடத்தில்
சுமந்து செல்கையில்
தவித்த போதெல்லாம் வாங்கிப்
பருகிய நீர்
தண்ணீர்ப் பந்தல்களில் ஊர்
முக்குகள் தோறும்
மண்பானையில் குளுமையோடு உறைந்திருந்த
நீர்
எந்த வீட்டின் முன்பு நின்று
குரல் கொடுத்தாலும்
செம்பிலும் லோட்டாவிலும்
நிறைந்து வந்த நீர்
தெருதோறும் பஞ்சாயத்துப்
பைப்புகளில்
நேரம் வைத்து காற்றோடு காற்றாய்க்
கலந்து வந்த நீர்
தாயைப் பழித்தாலும் தண்ணீரைப்
பழிக்காமல்
மோருக்கு விலை வைத்தாலும்
நீருக்கு விலை வைக்காமல்
வானம் போல வியாபித்திருந்த
நீர்
தண்ணீருக்குப் பஞ்சம் என்றாலும்
பஞ்சத்தின் சுவடின்றி பெட்டிக்
கடையில்
புட்டியில் அடைபட்டுக் கிடைக்கும்
ஒரு லிட்டர் தண்ணீர் இருபது
ரூபாய்
*****
No comments:
Post a Comment