திருட்டுத் தொழில் முயற்சிகள்
நாட்டில் திருட்டு முயற்சிகளுக்கு அளவீடுகள் ஏதும் இல்லை என்றுதான்
சொல்ல வேண்டும். காலத்திற்கேற்ப திருட்டு முயற்சிகள் தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன.
கொரோனா சோதனை செய்ய வந்திருக்கிறோம் என்று மயக்க மருந்து அடித்துத்
திருடிச் சென்றவர்கள் பற்றிய செய்தியை அண்மையில் கேள்விப் பட்டேன். வங்கி விவரங்களை
லாவகமாக அலைபேசியின் மூலமாகக் கேட்டு அநாயசமாகத் திருடுபவர்கள் பற்றிய செய்திகளைக்
காலம் காலமாகக் கேள்விப்பட்டு வருகிறேன்.
கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகத் தாக்கிய காலங்களில் ரெம்டெசிவர்
எனும் மருந்து கள்ளச் சந்தையில் விற்கப்பட்டதும் ஒரு வகைத் திருட்டுதான். அதே காலத்தில்
கரும்பூஞ்சைக்கான மருந்துகளும் ஒன்றுக்குப் பத்தாய் விலை வைத்து விற்கப்பட்டன.
கொரோனா பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கால நெருக்கடிகளைத்
தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பத்து ரூபாய் சரக்கை இருபது ரூபாய்க்கு
விற்ற அநியாயங்களும் ஊரெங்கும் நடந்தன. இது வியாபாரம் என்ற போர்வையில் நடைபெற்ற திருட்டு.
பத்து ரூபாய்க்கு விற்கப்படும் பொருளுக்கு ஏற்கனவே அதில் ஒரு லாபம் இருக்கும். இதில்
அந்தப் பொருளை இருபது ரூபாய்க்கு விற்றால் கிடைக்கப் போகும் அத்தனை லாபமும் திருட்டுக்குச்
சமமானதுதான் இல்லையா!
அதே கால கட்டத்தில் ஆக்ஸிஜன் படுக்கைகளை முன் கூட்டியே பதிவு
செய்து தருகிறேன் என்று காசு பார்த்தவர்களும் இருந்தார்கள். இது ஒரு வகை நாகரிக திருட்டு
என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.
இந்தச் சம்பவங்களை எல்லாம் ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் எனக்கென்னவோ
திருட்டைத் திருட்டு என்று உணரக் கூடிய மனநிலை இல்லாதவர்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்களோ
என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
மனித நடமாட்டம் குறைவாக உள்ளதைச் சாதகமாக்கித் திருடுபவர்களும்,
ஜேப்படி திருடர்களும் எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்கிறேன். அவர்கள் திருட்டை மிக
நேரடியாகச் செய்கிறார்கள். மேலே நாம் பார்த்தோமோ அந்தத் திருடர்களைப் போல மறைமுகமாக
எல்லாம் செய்வதில்லை. வர வர நாட்டில் நியாயவாதிகளைப் போன்ற தோற்றம் தரும் நாகரிகத்
திருடர்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் வேதனை என்னவென்றால் நாகரிகமாகத் திருடுவதைத் தங்கள் தொழில்
என்று கூறிக் கொள்கிறார்கள். இனிவரும் காலங்களில் தொழில்கள் எல்லாம் இப்படித் திருட்டுத்தனம்
நிறைந்ததாகத்தான் மாறிப் போகுமோ என்னவோ?
*****
No comments:
Post a Comment