ஏ.டி.எம். பாதுகாப்பில் ஏன் அலட்சியம் காட்ட வேண்டும்?
பணத்தோடு செல்லும் மனிதர்களுக்குப் பொதுவாகப் பாதுகாப்பு கிடையாது.
அவர்கள் பணத்தோடு செல்லும் போது பணத்திற்கும் தங்களுக்கும் உரிய பாதுகாப்போடு செல்ல
வேண்டும். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமிருக்காது என்ற சொலவத்தின் மூலம் இந்தப்
பாதுகாப்பு விசயத்தைத்தான் சொல்கிறார்கள்.
பணத்தோடு இருக்கும் இயந்திரங்களுக்கும் இது பொருந்தும். அண்மைக்
காலங்களில் பணம் வைத்திருக்கும் மனிதர்கள் பாதிக்கப்படுவதைப் போல பணம் வைத்திருக்கும்
ஏ.டி.எம். இயந்திரங்களும் கொள்ளையர்களால் பாதிக்கப்படுகின்றன.
மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்களில் இருக்கும் ஏ.டி.எம்.களில்
பணம் எடுப்பதைத் தவிருங்கள் என்று வங்கி நிர்வாகம்சொல்லும் அளவிற்கு நிலைமை இருக்கிறது.
அது சரி மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்களில் வங்கிகள் ஏன் ஏ.டி.எம்.களை அமைக்கின்றன?
அவர்களுக்கே மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடம் எனத் தெரிந்த பின்னும் அங்கு பாதுகாப்புக்காக
ஒரு காவலரைப் போடுவதில் ஏன் தயக்கம் காட்டுகின்றன?
ஆக்ஸிஜன் சிலிண்டர், கட்டிங் மெஷின், கடப்பாரை சகிதமாக ஏ.டி.எம்.மைக்
கொள்ளையடிப்பவர்கள் வரும் அளவுக்கு ஏ.டி.எம்.களின் நிலைமை இருக்கிறது. இப்படி ஒரு கொள்ளையைத்
தடுக்க முயன்று திருவாரூக்கு அருகில் ஒருவர் உயிர் நீத்த சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.
அதற்குப் பிறகாவது அந்த ஏ.டி.எம்.மிற்கு ஒரு பாதுகாப்புக் காவலரை சம்பந்த்தப்பட்ட வங்கி
நிர்வாகம் பணியமர்த்தியிருக்க வேண்டும்தானே? அதுதான் இல்லை. அந்தச் சம்பவம் நிகழ்ந்து
ஏழெட்டு மாதங்கள் கடந்து விட்ட இப்போது வரை பணியமர்த்தவில்லை.
ஒவ்வொரு ஏ.டி.எம்.மிற்கும் ஒரு காவலரை நியமிக்கும் போது ஒருவருக்கு
வேலை கிடைக்கிறது. ஏ.டி.எம்.மிற்கும் பாதுகாப்பு கிடைக்கிறது. ஏ.டி.எம்.மிற்கும் மட்டுமல்லாது
அந்த ஏ.டி.எம்.மிற்கும் பணம் எடுக்க வந்துப் போகும் மனிதர்களுக்கும் ஒரு பாதுகாப்புணர்வு
கிடைக்கிறது.
வங்கி நிர்வாக விதிகளை வகுக்கும் ரிசர்வ் வங்கியும் காவலர்கள்
இல்லாமல் ஏ.டி.எம்.களை அமைக்கக் கூடாது என்பதைக் கட்டாயம் பரிசீலனை செய்து நிறைவேற்ற
ஆவன செய்ய வேண்டும். ஏனென்றால் ஏ.டி.எம்.களில் பறி போவது பணம் மட்டுமில்லாமல் சமயங்களில்
மனித உயிர்களும் பறி போகின்றன. அது மட்டுமின்றி ஏ.டி.எம்.களின் பாதுகாப்புகளில் இருக்கும்
இப்படியொரு ஓட்டை ஏ.டி.எம். கொள்ளையர்களை உருவாக்கி விடவும் காரணமாகி விடக் கூடாது.
*****
No comments:
Post a Comment