10 Nov 2021

செயின் பறிப்புச் சம்பவங்களின் கட்டமைப்புகள்

செயின் பறிப்புச் சம்பவங்களின் கட்டமைப்புகள்

            நகர்ப் பகுதிகள், புறநகர்ப் பகுதிகள் போன்றவற்றில்தான் செயின் பறிப்புச் சம்பவங்கள் நிகழ்கின்றன என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது அது போன்ற சம்பவங்கள் கிராமப் பகுதிகளிலும் நிகழத் தொடங்கி விட்டன.

            அதிகாலையில் எழுந்து வாசல் கூட்டி கோலம் போட்டுக் கொண்டிருந்தார் அந்தக் கிராமப்புற பெண். அந்த நேரம் பார்த்து இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த இருவர் செயினைப் பறித்துக் கொண்டு சென்று விட்டனர். இப்படித்தான் கிராமப்புறங்களில் செயின் பறிப்புச் சம்பவங்கள் நிகழத் தொடங்கின. இந்தச் சம்பவத்திற்குப் பின் பெண்கள் அதிகாலையில் எழுந்து கோலம் போடும் பழக்கத்தைக் குறைத்துக் கொண்டு விட்டனர். இப்போதெல்லாம் தெருவில் மனித நடமாட்டம் தொடங்கிய பிறகு காலை ஏழு அல்லது எட்டு மணிக்கு மேல்தான் கோலம் போடத் தொடங்குகிறார்கள். இந்தச் செயின் பறிப்புச் சம்பவம் கிராமப்புறங்களில் இப்படி ஒரு மாற்றத்தை உண்டு பண்ணி விட்டது.

            பெரும்பாலும் பெண்கள்தான் செயின் பறிப்புச் சம்பவங்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆண்களை விட பெண்களின் கழுத்துகளில் நிறைந்திருக்கும் தங்க செயின்கள் அதற்குக் காரணமாக இருக்கலாம். இப்படிச் சொல்வது பெண்களுக்கு எதிரான கருத்தாக இருக்காது என நினைக்கிறேன்.

பெண்களிடமிருந்து செயின்களைப் பறித்துப் பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் பெரும்பாலும் ஆண்களாகத்தான் அமைகிறார்கள். இதற்காக அவர்கள் இரு சக்கர வாகனங்களை மிக நூதனமாகப் பயன்படுத்துகிறார்கள். ஒரு பைக் இருந்து இரண்டு ஆண்கள் சேர்ந்தால் செயின் பறிப்புக்கான ஒரு கட்டமைப்பைச் செய்து கொள்ள முடியும். இப்படிச் சொல்வது ஆண்களுக்கு எதிரான கருத்தாக அமையாது என நினைக்கிறேன்.

செயின் பறிப்புச் சம்பவங்களில் உயிராபத்து நிகழக் கூடிய அபாயமான சாத்தியங்களும் இருக்கின்றன. செயின் பறிப்புகள் நிகழும் போது கழுத்தில் அணிந்திருக்கும செயின் அறுபடாத அளவுக்கு அழுத்தமான செயினாக அமைந்து விட்டால் அது போட்டிருப்பவரின் கழுத்தை அறுத்து விடக் கூடிய அபாயங்களும் இருக்கின்றன.

ஏன் இந்தச் செயின் பறிப்புச் சம்பவங்கள் நிகழ்கின்ற என்பதற்குப் பின்னால் சமூக உளவியல் சார்ந்த காரணங்கள் இருக்கின்றன. போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் போதைப் பொருட்களை வாங்க காசில்லாத போது செயின் பறிப்பை மனசாட்சியின்றி தேர்வு செய்கிறார்கள். அதிகமாகச் செலவு செய்து பழக்கப்பட்ட மேல்தட்டு வர்க்கத்தினர் தொடங்கி வேலைவாய்ப்பற்ற நடுத்தர மற்றும் அடித்தட்டு வர்க்கத்தினர் வரை பணத் தேவைக்காக இந்தச் செயின் பறிப்பைச் செய்கின்றனர். செயின் பறிப்பை ஒரு தொழில் முறையாக்கிக் கொண்டு செய்பவர்களும் இருக்கிறார்கள்.

வழிப்பறிக் கள்வர்களைச் சங்க இலக்கியங்களில் பார்க்கலாம். இந்தச் செயின் பறிப்புச் செய்பவர்கள் வழி தேடி வந்து பறிக்கும் கள்வர்களாய் இருக்கிறார்கள்.

மகாத்மா காந்தியடிகள் குறிப்பிடும் ஒரு வாசகத்தை இந்த இடத்தில் ஒப்பு நோக்குவது முக்கியமானதாகக் கருதுகிறேன். நள்ளிரவில் நகையணிந்த பெண் பாதுகாப்பாக வீடு திரும்பும் நாளைச் சுதந்திரம் பெற்ற நாளாகக் காந்தியடிகளின் அவ்வாசகம் குறிப்பிடும். இவ்வாசகம் பகல் பொழுதில் நகையணிந்த பெண்ணுக்குச் சமூகத்தில் இருந்த பாதுகாப்பைக் குறிப்பிடுவதாக உள்ளது. சுதந்திரம் பெற்று எழுபதாண்டுகளைக் கடந்த நிலையில் பகல் பொழுதில் பெண்களுக்குக் கிடைத்த பாதுகாப்பும் கிடைக்காமல் போனதுதான் மிச்சம்.

*****

No comments:

Post a Comment

மன்னார்குடி கோபாலர் எண்ணெய் ஆலையின் திருவிளையாடல்!

மன்னார்குடி கோபாலர் எண்ணெய் ஆலையின் திருவிளையாடல்! மன்னார்குடிக்கு ‘கோபாலர் எண்ணெய் ஆலை’ எனும் கோபாலர் ஆயில் மில்லும் சிறப்பு பெற்றதுதான்....