27 Oct 2021

மனதைத் திருகும் திருகாணி

மனதைத் திருகும் திருகாணி

காணாமல் போன காதணியின் திருகாணி

தண்ணீர்க் குடத்தின் அடியில் தங்கும் கறையைப் போல

மனதில் அடியில் தங்கி விட்டது

தொலைத்த இடம் அறியாது

காணுமிடங்களில் எல்லாம் தேடச் சொல்கிறது

ஈராண்டுகள் மும்மாதங்கள் நான்கு நாட்கள்

கடந்த பின்னும் நினைவு வரும் போதெல்லாம்

திருகாணியின் தேடல் தொடர்கிறது

எதேச்சையாய்த் தேடுதல் வழக்கமான பின்

சந்து பொந்து இண்டு இடுக்கு எல்லாம்

புதையலின் ரகசியப் பாதைகளாய்த் தெரிய

தேடித் தேடி ஓயும் பொழுதுகளில்

பீடை தொலைந்ததென ஆறுதல் கொள் என்பாள் அம்மா

காணாமல் போகாதிருந்திருக்க

காதோடு சிறு பெட்டியொன்றைச் செய்திருக்கலாம் என

கிண்டல் செய்து விட்டுப் போவார் அப்பா

தோடு தப்பித்துத் திருகாணியோடு போனதே என்பார் மாமா

தொலைத்த பொருள் கிடைக்காமல் போகாது என

அணுக்கமாய் வந்து ஆறுதல் சொல்வாள் அத்தை

கடந்துகொண்டிருந்த நாட்கள் ஒன்றில்

திருவிழாவில் தொலைந்த பிள்ளை

தானாய்த் திரும்பி வந்ததைப் போல

திருகாணி கிடைத்த பின்னும்

அவ்வபோது தன்னை அறியாமல்

ஆங்காங்கே திருகாணியைத் தேடும் மனதை மட்டும்

எங்கே தொலைப்பதென்று தெரியவில்லை

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...