விதிகளின் இருப்பு
ஒவ்வொரு முறையும் சரியானது
மீறப்படும் போது
ஒரு புதிய தவறு வந்து சேர்ந்து
கொள்கிறது
தவறைத் திருத்த ஒரு புதிய
விதி தேவைப்படுகிறது
புதிய விதி இயல்பை முடக்கும்
போது
நெகிழ்ந்து கொடுக்கும் விதியின்
சலுகைகளைப் பிடித்தபடி
புதுப்புது தவறுகள் வந்து
சேர்கின்றன
மனிதர்கள் தவறுகளின் குழந்தைகள்
என்பதை அறியாதவர்கள்
விதிகளால் கோணலை நேராக்க
முயன்று
அஷ்ட கோணலாக்கும் அபத்தத்தைப்
புரிகிறார்கள்
வளைகோடின்றி நேர்கோட்டைப்
புரிந்து கொள்ள இயலாது
தவறுகள் இல்லாத உலகில் விதிகளுக்குத்
தேவை இருக்காது
சாத்தானின் இருப்பே கடவுளை வணங்க வைக்கிறது
வறுமையே கொடைத்தன்மையைப்
புகழ வைக்கிறது
தவறுகளுக்குத் தயவு செய்து
நன்றி சொல்லுங்கள்
கொஞ்சம் பொறுத்தால் உங்கள்
விதிகளின் தேவையின்றி
எல்லாம் சரியாகும் என்பது
உங்களுக்குத் தெரியுமா
உங்கள் விதிகளைக் கேட்டுக்
கொண்டு
உலகம் சுழல்வதாகவா நினைக்கிறீர்கள்
உலகம் சுழல்வதற்கேற்ப நீங்கள்
ஒரு விதியை
உலகில் உலவ விடுகிறீர்கள்
என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்
உங்கள் விதிகளின் பலவீனத்தைச்
சொன்னால்
உங்களால் கூட உங்கள் விதிகளோடு
ஒத்துப் போக இயலாது
*****
No comments:
Post a Comment