4 Oct 2021

நிரூபணமாகும் தமிழரின் தொன்மை

நிரூபணமாகும் தமிழரின் தொன்மை

            சங்க இலக்கியம் அந்த நதியைப் பொருநை நதி என அழைக்கிறது. தற்காலம் அந்த நதியைத் தாமிரபரணி என அழைக்கிறது. தமிழர்களின் தொன்மையை அறிவியல் பூர்வமாக உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை போன்ற தொல்லிய சான்றுகள் கிடைத்துள்ள இடங்கள் அனைத்தும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கின்றன.

வைகை நதிக்கரையும் தமிழ் நாகரிகம் செழித்த இடம்தான். தொல்லியல் சான்றுகளால் தமிழரின் தொன்மையைப் பறைசாற்றிய கீழடி வைகை நதிக்கரையின் கொடை. அதனால்தான் மதுரையை அதிகம் திரைப்படங்களில் பயன்படுத்துகிறோம் என்று திரைத்துறை பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்.

தாமிரபரணி நதிக்கரையின் இடங்களில் கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகளின் வயது அறிவியல் பூர்வமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதை அறிந்து கொள்ளும் போது ஆதாரப்பூர்வமாக உண்மையை வெளிக்கொணர்வதென்றால் அதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என்பது புரிகிறது.

Ø ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகள் 2850 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

Ø கொற்கையில் கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகள் 2900 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

Ø சிவகளையில் கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகள் 3155 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

Ø கொடுமணலில் கிடைத்துள்ளவை 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

Ø அழகன்குளத்தில் கிடைத்துள்ளவை 2400 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

Ø தாண்டிக்குடி மற்றும் பொருந்தலில் கிடைத்துள்ளவை 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

இவற்றை நோண்டி நோண்டி அதாவது தோண்டி தோண்டி கண்டுபிடித்துக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கியம் அதைத்தானே சொல்கிறது. திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. தொல்காப்பியம் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதையும் தாண்டி தொல்காப்பியம் முற்பட்டது என்று சொல்லும் தமிழறிஞர்கள் இருக்கிறார்கள். வருங்காலத்தில் கிடைக்கப் போகும் தொல்லியல் சான்றுகளால் அதையும் நிரூபிக்க வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்.

இனி பழம்பெருமை பேசுகிறார் தமிழர் என்று யாரும் சொல்ல முடியாது. பெருமையை இயல்பாய்க் கொண்ட ‘தமிழரின் பெருமை’ பண்டு தொட்ட பழமையிலிருந்து இருந்து வருகிறது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.

*****

No comments:

Post a Comment

தமிழக வெற்றிக் கழகம் சாதிக்குமா? சோதிக்குமா?

தமிழக வெற்றிக் கழகம் சாதிக்குமா? சோதிக்குமா? தமிழகம் பலவற்றில் முன்னேறி வருகிறது. படித்தவர்களின் எண்ணிக்கை, பணக்காரர்களின் எண்ணிக்கை, தொழி...