சிரிப்பைத் தொலைத்த முள்
பூவாக மலர்ந்திருக்க வேண்டியதாகச் சொல்லும் முள்
அடுத்த பிறப்பில் அவ்வாறு மலர்வேன் என்கிறது
அழகிய பூக்களின் நந்தவனத்துக்கு நானே வேலி என்கிறது
தான் சோளக்காட்டு பொம்மை போல
அச்சுறுத்துகிறேனோ என்று சந்தேகப்படுகிறது
தன் மிகு கூர்மை அஞ்சவே வைக்கும் என ஆறுதல் கொள்கிறது
கத்தியைப் போல அரிவாளைப் போல
அஞ்ச வைக்கும் மிகு கூர்மையே நான் என்று
ஆணவமும் கொள்கிறது
ஊசியின் மிகு கூர்மை துணிகளை இணைத்து
ஆடையாக்கி விட்டு நூலுக்கு விட்டுக் கொடுத்து
விலகிக் கொள்வதைப் போல
பூக்களுக்கு அழகை விட்டுக் கொடுத்து
ஒதுங்கிக் கொண்டதாகச் சொல்கிறது
நல்ல குடும்பத்தின் இரு பிள்ளைகளில்
ஒன்று தறுதலையாய்ப் போவதைப் போல
ஒரு கொடியில் ஒன்று பூவாய் ஒன்று முள்ளாய்
பிறப்பது கொடுமையென்று ஆற்றாமையில் அழுகிறது
அழுது கொண்டே இருக்கிறது
பூவின் அடியில் சிரிப்பைத் தொலைத்து விட்ட முள்
*****
No comments:
Post a Comment