30 Mar 2019

துலுக்கமாரு வூட்டுப் புள்ள



செய்யு - 40
            நரிவலத்தின் அடையாளங்களில் ஆண்டியப்பர் கோயில் முக்கியமானது. சனியின் பார்வையில் ஈசனார் ஆண்டியின் கோலம் கொண்டு அலைய நேர்ந்த காலம் ஒன்று இருந்ததாம். பல இடங்களில் அலைந்த ஈசனார் சனி பார்வை முடிந்து இங்குதான் கோயில் கொண்டாராம். அதனால் சனி தோஷம், சனி பார்வை உள்ளவர்கள் என்று பலரும் நேர்ந்து கொண்டும், நேர்த்திக்கடன் செய்யவும் நரிவலத்துக்கு வந்த வண்ணம் இருப்பர்.
            சிற்றிலக்கியக் காலத்தில் ஆண்டியப்பர் மேல் தெய்வசிகாமணிப் புலவர் (இவர் நரிவலத்தில் வாழ்ந்தவர்) என்பவர் ஆண்டியப்பரை நினைந்து மனமுருகி விருத்தப்பாக்களால் ஆன பாடலை மனமுருகி பாடியிருக்கிறார். அவரது குரல் சினிமா படங்களில் எதிரொலிக் குரல் கேட்பது போல கோயிலைத் தாண்டியும் ஊர் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. அவரது பாடலில் உருகிய கரும்புக்காட்டு நரி ஒன்று கோயிலைச் சுற்றி சுற்றி வந்திருக்கிறது. அந்தப் பாடலைக் கேட்ட பின் அந்த நரி கரும்புக்காட்டுக்குத் திரும்பாமல் ரொம்ப காலத்துக்கு கோயிலிலேயே இருந்ததாம். ஆண்டியப்பர் கோயில் அமைந்த ஊரில் கோயிலைச் சுற்றி நரி வலம் வந்ததால் ஊருக்கு நரிவலம் என பெயர் ஏற்பட்டதாக ஊரில் பேசிக் கொள்வார்கள்.
            பெரும்பாலான சிவன் கோயில்களைப் போன்றுதான் நரிவலம் கோயிலும் இருந்தது. கோயிலைச் சுற்றிப் பெரிய மதில். நந்தி, கொடி மரம் என்று கடந்து உள்ளே சென்றால் வலது பக்கம் நவகிரகங்கள் இருந்தது. இடது பக்கத்தின் வழியே சுற்றிச் சென்றால் தென்மேற்கு மூலையில் பிள்ளையார் சந்நிதி, வடமேற்கு மூலையில் முருகன் சந்நிதி. இவர்கள் இருவருக்கும் இடையில் அறுபத்து மூன்று நாயன்மார்கள். தெற்குப் பக்கத்தில் கோயில் பொருட்களும், கோயிலுக்கு வரும் நெல்லைச் சேமித்து வைக்கும் பத்தாயமும் இருந்தது. அந்தப் பத்தாயத்திலிருந்து எதிராகப் பார்த்தால் சிறிய சந்நிதியில் தெட்சிணாமூர்த்தி சந்நிதி இருந்தது. முருகன் சந்நிதியிலிருந்து நேராக வந்தால் வடகிழக்கு மூலைக்குச் சற்று முன்னதாக பள்ளியறை. அதைத் தொடர்ந்து நடராசர் திருமஞ்சன சந்நிதி.
            இந்த பள்ளியறை என்பதை வைத்து கழிவறையோடு தொடர்புபடுத்தி நரிவலம் பள்ளியில் வேலை பார்த்த தமிழாசிரியர் ஒருவர் கவிதைப்புத்தகம் எழுதியிருந்தார். அந்தக் கவிதைப் புத்தகத்தில் கோயிலில் பள்ளியறைக் கூட இருக்கிறது, கழிவறை இல்லையே என்ற தனது புரட்சிகரமான கருத்தை அவர் தெரிவித்திருந்தார். அவர் மிகச் சிறந்த பக்திமான். இருந்தாலும் இப்படி கவிதை எழுதியிருக்கிறாரே என்று அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கேள்விக்கு அவர் பதிலும் சொன்னார், "புதுக்கவிதை என்பது புரட்சிகரமானது. புரட்சிகரமானக் கருத்துகளைத் தெரிவிப்பதே புதுக்கவிதை" என்று. அவரது கவிதைப்புத்தகம் வெளிவந்து நான்கைந்து ஆண்டுகளுக்கு மேலிருக்கும். அந்தக் கவிதைப்புத்தகம் நரிவலம் கோயிலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. நரிவலம் கோயிலில் கழிவறை இல்லை. இப்போது கட்டியிருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை. விகடு படிப்பு முடிந்து நரிவலத்திலிருந்து வரும் வரையில் கழிவறைக் கட்டப்படவில்லை.
            ஹாஸ்டலிலிருந்து பிள்ளைகள் புறப்படும் போது ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் எல்லாவற்றையும் முடித்து விட்டுக் கிளம்பி விட வேண்டும் என்பார் வார்டன். "அங்க வந்து நின்னுகிட்டு ஒண்ணுக்கு ரெண்டுக்குன்னு நின்னுகிட்டு கோயில சுத்தி எங்கயாவது போயி அசிங்கபடுத்திட்டு வாரக் கூடாது! இப்படிதாங் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கோயிலுக்குப் போயிட்டு வாரப்ப நாடிமுத்துக்கு வெளிக்கி வந்து அசிங்கமாப்போயிடுச்சு!" என்று இதைப் பற்றி அவர் ஒவ்வொரு முறை கிளம்புவதற்கு முன் திருவாய் மலர்ந்தருளும் போது நாடிமுத்து தலைகுனிந்து கொள்வான். வார்டனே சொல்லி விட்டதால் அப்படி ஓர் அசிங்கம் தமக்கு வந்து விடக் கூடாது என்பதில் ஒவ்வொரு பிள்ளைகளும் கவனமாக இருப்பார்கள். வெள்ளிக்கிழமை கோயிலுக்கு என்றால் பள்ளி விட்டு வந்ததும் எல்லா பிள்ளைகளும் கழிவறையில் நின்று தங்கள் காரியத்தைக் கனகச்சிதமாக முடித்துக் கொண்டு இருப்பார்கள்.
            அப்படியே கிளம்பு கோயிலுக்கு கோயிலுக்குள் நுழைந்து நேராகப் பார்த்தால் ஆண்டியப்பர் லிங்க வடிவில் காட்சி தருவார். அதற்கு இடது பக்க பிரகாரத்தில் சாமி புறப்பாட்டுக்காகச் செல்லும் ஆண்டியப்பரின் மனித வடிவக் கோலம். வலது பக்கம் தெற்குப் பார்த்தாற் போல உமையாம்பிகைச் சந்நிதி.
             வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் ஹாஸ்டல் பிள்ளைகளை ஆண்டியப்பர் கோயிலுக்கு அழைத்துச் செல்வார்கள். பத்தி, சூடம் கொளுத்துபவர்கள், நெய்விளக்குப் போட விரும்புவர்கள் முதல் நாளே வார்டனிடம் அது குறித்து சொல்லி விட்டால் வாங்கிக் கொடுத்து விடுவார்.
            வெள்ளிக்கிழமை ஆறு மணிக்கு மேல் ‍தெய்வசிகாமணிப் புலவர் (நரிவலத்தில் வாழ்ந்தர்) இயற்றிய விருத்தப்பாக்களை தேவாரம் பாடுவதைப் போல பாடி அதற்கு ஒருவர் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க சுற்றி ஆண்களும் பெண்களுமாக இருபது முப்பது பேர் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஹாஸ்டல் பிள்ளைகளுக்கு விருப்பம் இருந்தால் அதைக் கேட்கலாம். எந்தப் பிள்ளைகள் கேட்பார்கள்? எல்லா பிள்ளைகளும் சாமியைக் கும்பிட்டோமோ, சுற்றி விளையாட ஆரம்பித்தோமா என்று இருப்பார்கள். ஓடி பிடித்து, கண்ணாம்மூச்சி, ஒளிஞ்சாம்பிடிச்சி என்று சிறுபிள்ளை விளையாட்டுகளை ஒரு ரவுண்டு கட்டி விளையாடி விடுவார்கள். ஹாஸ்டலிலும் இதுதான் விளையாட்டு. ஓட்டுக்கட்டத்தைச் சுற்றி ஓடுவார்கள். அங்கேயேும் இதே கண்ணாமூச்சி, ஒளிஞ்சாம்பிடிச்சிதான். இருந்தாலும் கோயிலில் விளையாடுவது தனி ரசனையாக இருக்கும். அதற்கு இறைவனே திருவிளையாடல் விளையாடியது காரணமாக இருக்குமோ என்னவோ!
            விகடு முதல்முறை ஆண்டியப்பரைத் தரிசிக்கப் போன போதே அவருக்கும் அவனுக்கும் பிணக்கு ஆரம்பமாகி விட்டது.
            ஹாஸ்டல் பிள்ளைகள் கலர் கைலிகளைக் கட்டக் கூடாது என்பதற்காக வேட்டியை மூட்டி வெள்ளை கைலியாகக் கட்ட வேண்டும் என்பார்கள். விகடுவும் அப்படித்தான் வெள்ளைக்கைலி கட்டியிருந்தான். நல்ல நெடுநெடுவென்ற உயரத்தில் நல்ல சிவப்பு நிறத்தில் வேறு இருந்தான். பார்ப்பதற்கு அப்படியே பாய்மார் வீட்டுப் பிள்ளையைப் போன்ற தோற்றம் இருந்தது.
            ஆண்டியப்பருக்கு கற்பூரம் காட்டி விட்டு  ஐயர்மார் சாமி கும்பிட்டவர்களுக்கு விபூதியும், குங்குமமும் கொடுத்துக் கொண்டிருந்தார். விகடுவும் அந்த வரிசையில் நின்றிருந்தான். விகடுவைப் பார்த்த ஐயர்மார், "துலுக்க வூட்டுப் புள்ளகல்லாம் வந்து கைநீட்டி நிக்குதுங்களே!" என்று விபூதி, குங்குமம் கொடுக்காமலே போய் விட்டார். விகடுவுக்கு ஒரு மாதிரியாகப் போய் விட்டது. முகம் சுண்டிப் போய் விட்டது. பக்கத்தில் நின்றிருந்த ராமராஜ் தன் கையில் இருந்த விபூதி, குங்குமத்தை நீட்டினான். விகடு அவன் கையைத் தட்டி விட்டு வேக வேகமாக வெளியே வந்தான். அவனுக்கு வெளியில் நின்றிருந்த வார்டனை அழைத்து வந்து தான் துலுக்கமார் வூட்டுப் பிள்ளை இல்லை என்பதை அந்த ஐயர்மாருக்கு நிரூபிக்க வேண்டும் போலிருந்தது.
            விகடு வேக வேகமாக வருவரைப் பார்த்த வார்டன், "சாமி கும்பிட்டுட்டு ஒரு வெளயாட்டப் போட்டுட்டுதானடா வருவீங்க. இன்னிக்கு ன்னா இவ்ளோ சீக்கிரம்?" என்றார்.
            "ஐயர்மாரு நமக்கு துன்னூரும், குங்குமமும் கொடுக்கல!" என்றான் விகடு.
            ஏன் என்பது போல அவர் விகடுவைப் பார்த்தார்.
            "நம்மள துலுக்கமாரு வூட்டுப் புள்ளன்னு நெனைக்கிறாரு. நீங்கதாங் வந்துச் சொல்லணும்!" என்றான் விகடு பரிதாபமாக.
            "அப்படியா சங்கதி! நீ பாக்குறதுக்கு அப்படிதாங் இருக்குறே!" என்று சொல்லிவிட்டு பெரிதாகச் சிரித்தார். சிரித்ததோடு இல்லாமல் பக்கத்தில் நின்ற அவருக்குத் தெரிந்த ரெண்டு மூன்று பேர்களை அழைத்து இந்தச் செய்தியைச் சொல்லி இன்னும் பெரிதாகச் சிரிக்க ஆரம்பித்து விட்டார். விகடுவுக்கு இந்த விசயத்தை வார்டனின் போய் ஏன் சொன்னோம் என்று தோன்றியது. அவன் மிகுந்த பரிதாபகரமாக நின்றான்.
            வார்டன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென்று சிரிப்பை நிறுத்திக் கொண்டு, "நீ உள்ளப் போ. நாம் வந்து சொல்றம்!" என்றார்.
            விகடு கோயிலுக்குள் வந்து வார்டன் வந்து சொல்கிறாரா என எதிர்பார்த்தான். வார்டன் உள்ளே வரவுமில்லை. வந்து சொல்லவுமில்லை.
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...