8 Nov 2017

ஓசோன் என்று எழுதி பிரிட்ஜூக்குள் வைக்கலாம்!

ஓசோன் என்று எழுதி பிரிட்ஜூக்குள் வைக்கலாம்!
            நன்மை என்று கருதுகின்ற ஒன்று நன்மையாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை. நன்மையாக இருந்து கொண்டு தீமையாகவும் இருக்கலாம்.
            குளிர்சாதனப் பெட்டி அப்படிப்பட்ட ஒன்று.
            காய்கறிகள், பழங்கள், பால், இட்டிலி மாவு, சட்டினி, சாம்பார் இவைகளைக் கெடாமல் பாதுகாப்பதாகச் சொல்லப்பட்டும் அந்தப் பெட்டி, ஹைட்ரோ ப்ளோரோ கார்பனை அனுப்பி ஓசோன் மண்டலத்தைக் கெடுத்து விடுகிறது.
            அப்பெட்டியிலிருந்து குளிர்ந்த நீரையும், குளிர் பானங்களையும் குடிக்கும் ஒவ்வொருவரும் உலக வெப்பமயமாதலுக்குக் காரணமாகிறார்கள். குளிரின் பின்னால் உறைந்து கிடக்கும் தகிக்கும் வெப்பம் அது.
            குளிர்ந்த நீர்தான் வேண்டும் என்றால் மண்பானை இருக்கிறது. வெட்டி வேரைப் போட்டால் வாசத்தோடு இன்னும் குளிர்ச்சி ஏறும்.
            ஒரு பெரிய மண்பானை கொள்ளும் அளவுக்கு பெட்டி ஒன்றை தயார் செய்து கொண்டு, அதில் பானையை வைத்து சுற்றிலும் மணலைக் கொட்டி, கொட்டிய மணலை நீரை ஊற்றி ஈர மணலாக்கி விட்டால் இயற்கையான குளிர்சாதனப் பெட்டி தயார்.
            இதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது என்றால்... அன்றன்றைய காய்கறிகளையும், பழங்களையும், பாலையும் அன்றன்றைக்கு வாங்கிக் கொண்டால் வீட்டுக்கொரு குளிர்சாதனப் பெட்டி தேவையில்லை.
            ஒரு சிறுவன் அப்பாவின் பெயரை எழுதி குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்த கதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஏனடா அப்படி செய்தாய்? என்று கேட்டதற்கு, அப்பாவின் பெயர் கெட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காக அப்படிச் செய்ததாகக் கூறினானாம்.
            வாங்கும் பொருட்கள் கெட்டு விடக் கூடாது என்பதற்காக சுற்றுச்சூழலைக் கெடுக்கும் குளிர்சாதனப் பெட்டியை வாங்கி வைக்கும் நாமும் ஓசோன் மண்டலம், சுற்றுச்சூழல், பூமி என்றெல்லாம் எழுதி அப்பெட்டிக்குள் வைத்துக் கொள்ளலாம். எதற்கு என்கிறீர்களா? அந்தச் சிறுவனின் நம்பிக்கையைப் போல அவைகள் கெட்டுப் போகாமல் இருக்கும் அல்லவா!

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...