அராஜகவாதத்தின் பலமும், ஜனநாயகத்தின்
பலவீனமும்!
மக்களை வழி நடத்தும் பொறுப்பில் இருப்பவர்களின்
குற்றப் பின்னணியானது விரைவு ரயிலின் வேகத்தில் அதிகரித்துக் கொண்டே போகிறது. அவர்களின்
பொருளாதாரப் பின்னணியானது அதை விட இன்னும் வேகமாக புல்லட் ரயில் வேகத்தில் அதிகரித்துக்
கொண்டே போகிறது.
எந்தத் தப்பையும் செய்யலாம், எவ்வளவு வேண்டுமானாலும்
சுருட்டலாம், எந்த குற்றத்திற்கும் உடந்தையாக இருக்கலாம், தேர்தல் நேரத்தில் வாக்குகளை
விலை பேசி விடலாம் என்ற நம்பிக்கையானது தேசிய நீரோட்டம் போல நாடெங்கும் அலை அலையாய்
அடிக்கிறது.
பெரிய மீன்களையும் பெரிய மனிதர்கள் தூக்கி
விட்டப் பிறகு, இருக்கின்ற சிறிய மீன்களாவது கிடைத்தால் போதும் என்று வாக்காளர்களின்
மனோநிலையும் வினோதமாக மாறிக் கொண்டு இருக்கிறது.
தேர்தல் நேரத்து பணப்புழக்கத்தைக் காட்டி
அதிரடியாக தேர்தல்கள்தான் நிறுத்தப்படுகின்றனவே தவிர, பணப்புழக்கத்துக்குக் காரணமானவார்கள்
மீது எந்த அதிரடியான நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.
குற்றப் பின்னணிக் கொண்டவர்கள் மீது தொடுக்கப்பட்ட
வழக்குகள் முடிவதற்குள் அவர்கள் சுக போக வாழ்வை வாழ்ந்து முடித்து சிவலோகப் பதவியையும்
பெற்று விடுகிறார்கள்.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் அதிகபட்சம் நமது
சமூகத்தில் சாதிக்கப்பட்டது என்னவென்றால் லஞ்சமும், ஊழலும் தேசியமயமாக்கப்பட்டதும்,
அதற்குத் தகுந்தாற் போல் அதிகாரத்தின் கோரப் பற்களை வளர்த்து விட்டதும்தான்.
வாக்குகளுக்குப் பணத்தையும் வாரிக் கொடுத்து
விட்டு, ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதியும் கொடுக்கிறார்கள். பணத்துக்கு ஓட்டுக் கிடைத்தாலும்
சரி அல்லது ஊழலை ஒழிப்பதற்கு ஓட்டுக் கிடைத்தாலும் சரி! எப்படியும் ஓட்டுக் கிடைத்து
விடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் பாருங்கள், அந்த நம்பிக்கைதான் அராஜகவாதத்தின்
பலம், ஜனநாயகத்தின் பலவீனம்.
*****
No comments:
Post a Comment