பலே! பலே! பலே கர்மா!
பிள்ளையாரைக் கல்லாக நினைத்து தூக்கி எறிந்த
பெரியாருக்கு அவர் மூத்திரப் பையில் தோன்றிய கல்லை தூக்கி எறிய முடியவில்லை என்ற கர்மா
குறித்த வாதத்தை அண்மையில் சமூக ஊடகங்களில் பார்த்தேன்.
கடவுளுக்கு எதிராகப் பேசியவர்களுக்கு தண்டனை
என்பது போல அவர் மூத்திர வாளியோடு சேவையாற்றியதைப் படம் பிடித்து வேறு போட்டிருந்தார்கள்.
என்ன சொல்ல வருகிறார்கள் அவர்கள்?
கடவுளை வணங்குபவர்களுக்கு மூத்திரக் கல்
வருவதில்லை என்கிறார்களா? கடவுளுக்கு ஆதரவாகப் பேசுபவர்களுக்கு மூத்திர வாளியைத் தூக்கும்
அவசியம் நேரிடாது என்கிறார்களா?
கர்மா குறித்த வாதம் மூலம் இருக்கின்ற
அமைப்பை அப்படியே ஏற்றுக் கொள் என்கிறார்களா? இருக்கின்ற அமைப்பு என்பது இறைவனால்
உருவாக்கப்பட்டது என்பது போலவும் அதை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது போலவும்
ஒரு கட்டமைப்பை உருவாக்க முனைகிறார்களா?
ஆனால் அப்படியில்லையே நிலைமை. அரசியல்
சாதுர்யங்களால், புத்திசாலித்தனமான காய் நகர்த்தல்களால், சாமர்த்தியமான பழி வாங்கல்களால்
நகர்ந்து கொண்டிருக்கின்றன நம்முடைய அதிகார அரசியல் கட்டமைப்புகள். இப்படி செய்வதையெல்லாம்
செய்து விட்டு அவைகளையெல்லாம் அப்படித்தான் என்று வாதிடுவது எந்த அறிவுக்குப் பொருந்தும்?
முதல்வர் கனவில் இருந்தவர்கள் முதல்வராகவில்லை
என்பதாகவும், அப்படிப்பட்ட கனவில் இல்லாதவர்கள் முதல்வராகி விட்டதாகவும் அந்தப் பதிவு
மேலும் பலவற்றைப் பேசிச் செல்கிறது.
காலம் இன்னும் இருக்கிறது. யார் வேண்டுமானாலும்
முதல்வராகலாம். யார் வேண்டுமானாலும் முதல்வர் கனவு காணலாம். ஒருவர் முதல்வர் கனவில்
இல்லை என்று இன்னொருவரால் சொல்ல முடியாது. எனக்கும் கூடத்தான் முதல்வராக வேண்டும்
என்ற கனவு இருக்கிறது. ஏன் உங்களுக்கும் கூட அப்படி கனவு இருக்கலாம். இருக்கக் கூடாது
என சட்டமா என்ன?
கர்மா என்பதற்கு விளக்கம் கூறுவதாக நினைத்துக்
கொண்டு முன்னால் முதல்வர்கள் சிலரின் எதிர்பாராத மரணத்தையும், தலைவர்கள் சிலரின் பிரபல்யம்
சறுக்கும் நிலையில் ஏற்பட்ட மரணத்தையும் அப்பதிவில் சான்று காட்டியிருந்தார்கள்.
நோய்வாய்ப்பட்டு நேர்ந்த மரணத்தையும்,
முதுமையின் காரணமாக ஏற்பட்ட மரணத்தையும் எப்படி எதிர்பாராத மரணம் என்று சொல்ல முடியும்?
அரசியல் நிலைமைகளால் நேரிட்ட படுகொலைகளை எப்படி பிரபல்யம் சறுக்கும் நிலையில் ஏற்பட்ட
மரணம் என சொல்ல முடியும்?
முன்னாள் முதல்வர் மரணத்துக்கு இன்னொரு
முன்னாள் முதல்வர் கருத்துச் சொல்லும் நிலையில் இல்லை, அவர்களின் எதிர்பார்ப்புகள்
நிறைவேறவும் இல்லை என்று மேலும் போகும் பதிவுகள் கர்மாவிலிருந்து யாரும் தப்ப முடியாது
என்ற சப்பைக்கட்டுக்கு மேலும் பல உலக அரசியல் முரண்களை எடுத்துக் காட்டுகிறது.
வரலாற்றில் இத்தகைய முரண்களை இயங்கியல்
பொருள்முதல் வாதமாக மார்க்ஸ் குறிப்பிடுகிறார். ஒடுக்கப்பட்ட இனம் எழுவதும், எழுச்சிபெற்ற
இனம் அதிகார வர்க்கமாக உருப்பெற்று மற்றொரு இனத்தை அடக்குவதும் காலம் காலமாக வரலாற்றில்
முரண்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
கர்மாவை நம்பியிருந்தால் அதிகாரத்திற்கு
எதிரான போராட்டங்களும், அடக்குமுறைகளுக்கு எதிரான குரல்களும் வரலாற்றில் எழுந்திருக்கவே
எழுந்திருக்காது. இன்று நாம் பேசிக் கொண்டிருக்கும் மனித நேயம் மற்றும் உலக அமைதி
குறித்து எண்ணங்களும், சிந்தனைகளும் தோன்றியிருக்காது.
பகுத்தறிவுக்கும், சுதந்திரமான சிந்தனைக்கும்
எதிரான கருத்துகளை முன்வைப்பதையே கர்மா என்கிற வாதம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.
அதை ஏற்றுக் கொள்வதைப் போன்ற பிற்போக்கு வாதம் எதுவும் இல்லை.
ஒருவேளை கர்மாவுக்கு ஆதரவாக அந்தக் கருத்தை
ஏற்றுக் கொண்டிருந்தால் எத்தகைய அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களும் உலகில் ஏற்பட்டிருக்காது.
மேலும் கர்மா என்று நோயை ஏற்றுக் கொண்டு உலகின் இறப்பு விகிதம் அதிகமாயிருக்குமே
தவிர மருத்துவத்தின் உதவி கொண்டு வாழ்நாளை நீட்டிப்பதற்கான முயற்சிகளும், கண்டுபிடிப்புகளும்
அறவே நிகழ்ந்திருக்காது.
கர்மாவை ஆதரிப்பவர்களே! கர்மாவை எதிர்க்க
வேண்டும் என்று சிந்திப்பவர்களையும் கர்மாதான் உருவாக்குகிறதா?
*****
No comments:
Post a Comment