மனதின் ஜீவன் மனிதன்
யாரும் யாரைப் பற்றியும் யாரிடமும் தவறாகச்
சொல்லாமல் இருப்பது தனி மனித மனச் சுகாதாரத்திற்கு ஏற்ற ஒரு நல்ல பழக்கம். அதனால்
ஏதோ ஒரு சமயத்தில் அதுவே மனிதனுக்கு ஆப்பாக வந்து முடிவதை நூற்று நூறு தடுக்க முடியும்.
ஒருவரைப் பற்றிக் குறை சொல்லி மற்றவர்களிடம்
ஆறுதல் தேட முடியும் என நினைக்கிறான். அப்படி அவன் தேடும் ஆறுதல் ஆறுதலாக இருப்பதில்லை.
அது ஆறுதலாகத் தோற்றம் தரும் கானலே.
எல்லா பிரச்சனைகளும் மனிதன் தேடும் ஆறுதல்களிலிருந்துதான்
உண்டாகி இருக்கின்றன என்பது ஒரு நுட்பமான உண்மை.
ஆறுதல், தேறுதல் எல்லாம் காலத்தால் மனிதனுக்கு
வழங்கப்பட்டு விடும். மனிதன் செய்ய வேண்டியது எல்லாம் பொறுமையோடும், சகிப்புத் தன்மையோடும்
காத்திருப்பதுதான்.
பேசி ஆறுதலைத் தேடுபவர்கள் அதுவும் மற்றவர்களைக்
குறை சொல்லி ஆறுதலைத் தேடுபவர்கள் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் ஒரு போதும்
ஆறுதலை அடைவதில்லை. அவர்களால் ஆறுதலை அடைய முடியாது.
குறைக் கூறிப் பேசுதலில் ஆறுதல் இல்லை.
அது தற்காலிகமாக மனதின் துர்நாற்றத்தின் சிறு பகுதியை எடுத்து வெளியே வீசுவதுதான்.
சிறிது நேரம் துர்நாற்றம் சிறிது குறைந்ததாகத் தோன்றலாம். கொஞ்ச நேரத்திற்கு எல்லாம்
அந்த துர்நாற்றம் இரு மடங்காகி முன்னை விட அதிக துர்நாற்றத்தை வீசத் தொடங்கி விடும்.
முழுமைய வெட்டி வீச வேண்டியது மனதைத்தான். குறை கூறும் அந்த மனதைத்தான்.
மனிதனால் மனதை முழுமையாக வெட்டி வீச முடியாது.
ஏனெனில் அந்த மனம்தான் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஜீவன் அவன்.
*****
No comments:
Post a Comment