16 Aug 2017

உன்னிலிருந்து துவங்கு!

உன்னிலிருந்து துவங்கு!
            எல்லா கோபத்தையும் ஒரே தராசில் நிறுப்பதற்கில்லை. இந்தக் காலக்கட்டத்தின் கோபம் முந்தைய காலக் கட்டத்தை விட வித்தியாசமானது. முற்றிலும் மாறுபட்டது.
            கோபம் மிக ஆபத்தானது. இந்தக் காலக் கட்டத்து கோபம் மிக மிக ஆபத்தானது. இந்தக் காலக் கட்டத்தின் கோபம் அநேகமாக மனச்சோர்வாலும், மனஅழுத்தத்தாலும் ஏற்படுவது. கத்தியை எடுத்துக் குத்துவதோ, துப்பாக்கியை எடுத்துச் சுடுவதோ அந்தக் கோபத்திற்கு ஒரு பெரிய விசயமில்லை.
            நீங்கள் அமெரிக்கச் செய்திகளை ஒரு பார்வைக்கு எடுத்துக் கொள்ளலாம். பள்ளி, கல்லூரிகளில் அங்கு துப்பாக்கியால் சுடுகிறார்கள். நாடுகளின் எல்லைகளில் நடந்த வந்த துப்பாக்கிச் சூடுகளை அந்த நாடு கல்விச் சாலைகளில் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
            படிக்காதவன் ஏதோ ஆத்திரத்தில் செய்து விட்டான் என்ற நிலை மாறி விட்டது. படித்தவனும் ஆத்திரத்தில் அதையே செய்கிறான். படித்தவன், படிக்காதவன் என அனைவர்க்கும் மனம் ஒன்றுதான்.
            எந்த மனமும் தான் பாதிக்கப்படுவதை ஒரு போதும் அனுமதிக்காது. எதிர்த் தாக்குதலை துல்லியமாக நிகழ்த்தும். கோபம் அதன் ஒரு வடிவம். ஒவ்வொரு மனிதனும் தன் மனதைத் தானே தாக்கிக் கொள்கிறான். மனதின் எதிர்த் தாக்குதலைத் துல்லியமாக மற்றவர்கள் மேல் திருப்பி விட்டு விடுகிறான்.
            இன்றைய மனிதன் நிறைய நினைக்கிறான். ஒரு நொடிக்கும் நூறு, இருநூறு என்ற விகித்ததில் சிந்தித்துக் கொண்டு போகிறான். எல்லாவற்றையும் சாதித்து விட முடியாதா என்ற ஏக்கம் அவனை வறுத்து எடுக்கிறது. அது சாத்தியமே இல்லாதது. அவன் சலித்துப் போகிறான். எதைச் செய்வது என்ற யோசனையிலேயே சோம்பலாகி விடுகிறான். எதுவும் இயலவில்லையே என்ற மனச்சோர்வு அவனை அழுத்துகிறது. அவன் கோபத்தின் உச்சியில் நின்று கூச்சல் போடுகிறான்.
            தன்னைப் புரிந்து கொள்ளாமல் ஒரு மனிதன் தன் கோபத்தையும் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் உங்களிலிருந்துதான் துவங்க வேண்டும்.

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...