5 Aug 2017

வாங்கிக் கட்டிக் கொள்ளுதல்

வாங்கிக் கட்டிக் கொள்ளுதல்
            உழைப்பின் அளவை வைத்து மனிதர்கள் மதிக்கப்படுவதில்லை. அவர்கள் பெறும் பலன்களின் அளவை வைத்தே அவர்கள் மதிக்கப் படுகிறார்கள். மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் மதிப்பிடப்படுவதைப் போலத்தான் சமூகத்தில் மனிதர்கள் அவர்கள் பெறும் பலன்களின் அளவை‍ வைத்து மதிப்பிடப்படுகிறார்கள். இது ஓர் ஆச்சர்யமான முரண்தான்.
            பள்ளி, கல்லூரி காலங்களில் நன்றாகப் படித்த என் நண்பர் ஒருவர் போட்டித் தேர்வில் தகுதி மதிப்பெண்கள் பெற முடியாமல் போன போது அவரைப் பற்றி அவரது மனைவி உட்பட அனைவரும் குறைபட்டுக் கொண்டார்கள். அவரைப் பற்றி மதிப்பை அவரது மதிப்பெண்கள் தாழ்த்தி விட்டது.
            மாறாக அவர் காலையில் விரைவாக எழுந்திருக்காமல் இருப்பது, காலை மற்றும் மாலை வேளைகளில் நேரம் கிடைத்த போது போட்டித் தேர்வுக்குத் தயாரிக்காமல் இருந்தது போன்ற குறைபாடுகள் அவரிடம் சுட்டிக் காட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நிலைமை தலைகீழ்தான்.
            அவர் கொஞ்சம் முயன்று படித்திருக்கலாம் என்பது உண்மைதான். அவருக்கு அது அறவே பிடிக்கவில்லை. அதைப் பற்றிச் சொன்னால் அவர் தகுதித் தேர்வு பற்றி சரமாரியாக வசவுகளை வாய் கூசாமல் கொட்ட ஆரம்பித்தார். தகுதித்தேர்வு தேவையா? தே‍வை இல்லையா? என்பது விவாதத்திற்குரிய அதே வேளையில் சில அடிப்படைகள் எப்போதும் மாறுவதில்லை.
            முயன்றால் முன்னேற்றம்தான் என்பதைப் புரிந்து கொள்ள மறுப்பவர்கள் சோம்பேறித்தனத்தைக் கொண்டாடுகிறார்கள். சோம்பேறித்தனத்திற்காகப் பலவித சாக்குப் போக்குகளையும் கூறிக் கொள்கிறார்கள். முயன்று பார்க்க தயாராக இருப்பவர்களிடம் சாக்கு போக்குகள் நிற்பதில்லை.
            முயல்பவர்களிடம் ஒரு கருத்தைச் சொன்னால் அது செயல் வடிவம் பெறும். மாறாக சோம்பேறிகளிடம் சொல்லும் கருத்துகள் திரும்ப நம்மையே வந்துத் தாக்கிப் பதம் பார்க்கும். சம்பந்தப்பட்ட நண்பரிடம் எஸ்.கே. மட்டும் எந்த கருத்தையும் எதுவும் கூறவில்லை. அதனால் எஸ்.கே. தப்பித்தான். மற்றவர்கள் அந்த நண்பரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது தனிக்கதை.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...