15 Aug 2017

எழுத்தாளர்களுக்கான மன விமோசனம்

எழுத்தாளர்களுக்கான மன விமோசனம்
            எஸ்.கே. அவனாக எழுதுகிறான். அப்படி ஓர் ஆணவ மனப்பான்மை வேண்டாம் என்பதிலும் அவன் தெளிவாக இருக்கிறான். அதுவாக வருகிறது. படித்தது, அனுபவப்பட்டது, மனமாக உருப்பெறுவது இப்படி. அதுவாகக் கருக்கொண்டு சிந்தனையின் திசைக்கு ஏற்ப வெளிப்படுபவைகளும் உண்டு.
            பத்திரிகைகளில் பிரசுரம் ஆவதைப் பற்றி அவன் நம்பிக்கை இழந்து விட்டான். அவைகள் குருட்டாம் போக்காகப் பிரசுரம் ஆவதாக நினைக்கிறான். இவைகள் ஏன் பிரசுரம் ஆகின்றன என்பதற்கும், இவைகள் ஏன் பிரசுரம் ஆகவில்லை என்பதற்கும் அவனால் விளக்கம் கொடுக்க முடிந்ததில்லை.
            எதைப் படிக்கிறோம் என்பதைப் பொருத்தும், எதைச் சிந்திக்கிறோம் என்பதைப் பொருத்தும், எதற்கு ஆசைப்படுகிறோம் என்பதைப் பொருத்தும் மனதின் தாக்கம் இருக்கும். இவைகள் எதிலும் கட்டுண்டு விடாத மனசு அற்புதமானது.
            உண்மையான சுதந்திரம் என்பது அந்தந்த மனசுக்கு மட்டுமே புரியும். பிரசுரம் என்ற புள்ளியில் எழுதி அதில் கட்டுண்டு விட வேண்டாம் என்றும், மனதின் மர்மப் புதிர்களை அவிழ்ப்பதில் அது ஒரு தடை என்றும் எஸ்.கே. தன்னளவில் ஒரு தெளிவு கொண்டான்.
            "எதை எழுதப் போகிறேன்? என்ன எழுதப் போகிறேன்? என்பதை அந்த நொடியே தீர்மானிக்கட்டும்! என்ன வந்து விழும் என்பதும் அந்த நொடி மட்டும் அறிந்த ரகசியமாக இருந்து விட்டுப் போகட்டும்!" இப்படியெல்லாம் சிந்திக்க ஆரம்பித்து ஒரு தத்துவாதியின் வாசனை அவன் மேல் அடிக்க ஆரம்பித்தது.
            சுதந்திர மனசு ஒரு விலை மதிக்க முடியாத விசயம். கட்டுடைத்த மொட்டு.

*****

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...