மிகு நேர்த்தி நோயாளர்கள்
மிக மிக நேர்த்தியாக செய்ய நினைப்பது ஒரு
வகை நோய். யாருடைய துணையில்லாமல் தானே அத்தகைய நேர்த்தியைக் கொண்டு வர வேண்டும் என்ற
மனஅழுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நம்மைச் சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். வெளியில்
தனக்கு நேர்த்தியின் மீது எந்தக் அக்கறையும் இல்லை என்பது போல அவர்கள் காட்டிக் கொள்வார்கள்.
உண்மையில் அவர்கள் நேர்த்தியின் பைத்தியங்கள்.
அவர்கள் எதிர்பார்க்கும் நேர்த்தி ஒரு
வகை கற்பனா வாதம். அப்படியெல்லாம் எதையும் செய்ய முடியாது என்பதை அவர்களுக்கு விளக்க
முடியாது. அப்படிச் செய்ய ஆசைப்பட்டு பைத்தியமாகப் போனவர்களின் கதைகளை அவர்களிடம்
விளங்க வைக்க முடியாது. முடிவில் அவர்கள் செய்ய இயலும் சாதாரண காரியத்தையும் செய்ய
முடியாமல் போவதைப் பார்க்கும் துக்ககரமான நிலைக்கு ஆளாகி விடுவார்கள்.
அவர்கள் தோல்வியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்
என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் தோல்வியைக் குறித்து அதிகம் பேசக்
கூடாது என்பது போல வெற்றியைக் குறித்தும் அதிகம் பேசக் கூடாது.
வாழ்க்கையின் உண்மையான வெற்றி - தோல்வி
என்பது தோல்வியை ஒரு நிகழக் கூடாத ஒன்றாக நினைக்காமல் இயல்பாக எடுத்துக் கொள்வதிலும்,
வெற்றியை ஒரு மாயையாக நினைக்காமல் இயல்பாக ஏற்றுக் கொள்வதிலும்தான் இருக்கிறது என்பதை
புரிய வைக்க வேண்டும்.
மனிதர்களுக்காகத்தான் வெற்றியே தவிர, வெற்றிக்காக
மனிதர்கள் இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். வெற்றி பெற்று வாழ்வதினும் சுயதிருப்தியோடு
வாழ்வது முக்கியம் என்பதை உணர வைக்க வேண்டும். அதற்கு முதலில் நீங்கள் இதை புரிந்தவராக
இருக்க வேண்டும். இல்லாவிடில் உங்கள் வழிகாட்டல் அர்த்தமிழந்து விடும்.
வெற்றி - தோல்வி என்பது வரும் போகும்.
அவரவர் மகிழ்ச்சி அவரிடம்.
*****
No comments:
Post a Comment