முடிவுகள் எடுப்பது எப்படி?
மிகுசோம்பல், மனச்சோர்வு இரண்டும் ஒன்று
சேர்ந்து வந்ததுண்டா? ஏன் இப்படி இருக்கிறது என்று யோசித்ததுண்டா? எதையும் செய்ய முடியாதது
போன்ற ஒரு நிலையை அனுபவித்ததுண்டா?
இப்படிப்பட்ட நிலை அதுவாக ஏற்படும், அதுவாக
விடுபடும் என்கிறீர்களா! அடிக்கடி இப்படி ஒரு நிலை ஏற்படுகிறது என்றால் நீங்கள் உங்களைக்
கொஞ்சம் கவனிக்க வேண்டும்.
எண்ணப் போக்குகளில் ஏற்படும் முரண்டும்
நிலை மனதை அப்படிப்பட்ட நிலைக்குத்தான் கொண்டு போய் தள்ளும்.
இதைச் செய்ய வேண்டும், இதைச் செய்யக் கூடாது
என்று எடுக்கும் முடிவுகளில் அப்படியே மாறுபடும் ஒரு நிலை ஏற்படும் போது இப்படி ஒரு
செயலற்ற நிலை ஏற்படும்.
கொஞ்சம் பொறுமையாக இருந்தால் இந்நிலை
மாறி விடும். நீங்கள் மனரீதியாக இறுகிக் கொண்டே போகிறீர்கள் என்பதன் வெளிப்பாடுதான்
இது. மனதை இலகுவாக்கிக் கொள்ள வேண்டும்.
உங்கள் மனதை இரண்டிரண்டு விசயங்களாகத்
தோன்றி வருத்தும். செய்வதா - வேண்டாமா, ஏற்பதா - விலகுவதா, முடியுமா - முடியாதா என்று
எல்லாம் இப்படி இரண்டிரண்டு விசயங்களாக இருக்கும்.
இரண்டை ஒன்றாக்க வேண்டும். இல்லையென்றால்
இந்த இரட்டை மனநிலை உங்கள் சக்தியையெல்லாம் உறிஞ்சி விடும்.
தீர்மானமாக ஒரு முடிவுக்கு எப்படி வருவது
என்கிறீர்களா? நீங்கள் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்து இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து
கொள்ளுங்கள். உங்கள் மனதை இப்படியா - அப்படியா என்று கலைப்பது சுற்றி இருப்பவர்களைச்
சார்ந்து நீங்கள் எடுக்க நினைக்கும் நிலைப்பாடுதான்.
சுற்றி இருப்பவர்களின் சொற்களை உங்கள்
மனதிலிருந்து கவனமாக விலக்குங்கள். இப்போது உங்கள் மனம் நிர்சலனமாக இருந்தால் அதில்
உங்கள் முடிவு மட்டும் தெரியும்.
அவர்கள் விரும்பாவிட்டால் என்ன? நீங்கள்
விரும்புகிறீர்கள். அது ஆசையாகவோ, பேராசையாகவோ இல்லாமல் உங்கள் உள்ளார்ந்த விருப்பமாக
மட்டும் இருந்தால், உங்கள் முடிவில் உறுதியாக இருங்கள். விசயம் முடிந்து விட்டது.
இனி நீங்கள் எதையும் தேர்ந்தெடுக்க வேண்டாம்.
உங்களுக்கு வேண்டியதை உங்களை அறியாமலே நீங்கள் சரியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு இருப்பீர்கள்.
*****
No comments:
Post a Comment