எளிமையின் அழகியல்
எளிமை எப்போது இல்லையோ, அப்போதே பிரச்சனை
ஆரம்பித்து விடும். எளிமை ஏன் இல்லாமல் போகிறது? அதீத விருப்பத்தினால் அது இல்லாமல்
போகிறது.
எப்படியாவது ஒரு செயலைச் செய்ய வேண்டும்
என்று நினைப்பதும், வித்தியாசமாக வெகு வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைப்பதும்
எளிமைக்கு எப்படி இடம் கொடுக்கும்? செய்து கொண்டிருக்கும் செயல்களை அந்த மனப்பான்மை
இகழ அல்லவா செய்யும்!
என்ன செய்கிறாய் நீ? எதுவுமே வித்தியாசமாக
இல்லையே! என்று தன்னையே மட்டம் தட்டிக் கொள்ளும் விநோத மனம் உங்களுக்குள் இருப்பது
உங்களுக்குத் தெரிகிறதா? இப்படித்தான் தாழ்வு மனப்பான்மை நிகழ்கிறது.
தயவுசெய்து தன்னைத் தானே மட்டம் தட்டிக்
கொள்ளும் ஒரு முட்டாள்தனமாக செயலை நாம் செய்து விடக் கூடாது. மற்றவர்கள் மட்டம் தட்டினாலும்
அதைப் பொருட்படுத்தக் கூடாது.
இந்த உலகில் மட்டமானது என்று எதுவும் இல்லை.
எல்லாம் உயர்வானவையே. மனதின் தோற்றம்தான் மட்டப்படுத்துகிறது என்பது உங்களுக்குப்
புரிகிறதா?
மற்றவர்களின் கவனத்தைக் கவர்கிறேன் என்று
எதையும் செய்யாதீர்கள். உங்கள் எளிமையை நீங்களே அழித்தது போல ஆகி விடும். மற்றவர்களின்
கவனத்தைக் கவர நீங்கள் மாறுபட்டுச் செய்ய வேண்டும். இயல்பாக இருப்பதை யாரும் கவனிப்பதில்லை.
மாறுபட்டுச் செயல்பட்டால் அங்கே எளிமை எப்படி இருக்கும்? எப்படி இருக்க முடியும்? அப்புறம்
சிக்கலாகி விட்டது என்று குழம்புவீர்கள்.
எளிய கேள்விகள் போதுமானது உங்களை மீட்டெடுக்க.
வாழ்வின் எந்தச் சிக்கலையும் எளிய கேள்விகள் மூலம் சிக்கெடுத்து விட முடியும். பேராசைகள்,
சுயநலங்கள் எளிய கேள்விகளை அனுமதிப்பதில்லை.
எளிய கேள்விகளின் வலிமை பேராசைகளையும்,
சுயநலங்களையும் தாக்க அழித்து விடும்.
புரிகிறதா? நீங்கள் கடினமாக யோசித்து
ஆகப் போவது ஒன்றுமில்லை. எளிமையாக ஆரம்பியுங்கள். அதுவே போதுமானது. வாழ்க்கை முன்னெப்போதையும்
விட அழகாக இருக்கும்.
*****
No comments:
Post a Comment