24 Jul 2017

உண்மையான பிக் பாஸ்கள்

உண்மையான பிக் பாஸ்கள்
            "எங்கேயாவது முகம் தெரியாத மனிதர்களிடம் ஏச்சுகளும், திட்டுகளும் வாங்கிக் கொண்டு வாழ்ந்து விட முடிகிறது. இந்த உறவுகளோடும், நட்புகளோடும், அது தரும் உளைச்சல்களோடும் ஒரு சிறு சுடுசொல்லைத் தாங்கி வாழ முடிவதில்லை"
                                    - எஸ்.கே.யின் குறிப்புகளிலிருந்து...
            உண்மையான பிக் பாஸ்கள் அன்றைய கூட்டுக் குடும்பத்தில் சகிப்புத் தன்மையோடு கடைசி வரை நம்பிக்கையோடு வாழ்ந்தவர்கள்தாம். இன்றைய கூட்டுக் குடும்பச் சிதைவைப் பிக் பாஸ் ஒரு அபத்த குறியீடு ஆக்குகிறது.
            அபார்ட்மெண்டில் இருப்பவர்கள் எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் நூறு நாட்களைக் கடந்து வாழ்நாள் முழுவதும் வாழ்கிறார்கள். சந்தேகம் அவர்களின் மனதை ஈக்களைப் போல் மொய்த்து சக மனிதனோடு கொள்ளும் தொடர்புணர்வில் கிருமிகளைப் பரப்புகிறது. அப்படி வாழும் வாழ்வை அவர்கள் மேன்மையாகவும் கருதிக் கொள்கிறார்கள்.
            அபார்ட்மெண்ட்வாசிகள் பிக் பாஸ் சவாலுக்கு ஏற்றவர்கள். அவர்களுக்கு அது ஒரு கழைக்கூத்தாடியின் சாகசங்களைப் போல் ஆச்சர்யம் தருவதில் எந்த வியப்பும் இல்லை.
            நம் பண்பாட்டுச் சிதைவை, கலாச்சாரச் சிதைவைக் காட்சி ஊடகங்கள் காசுகளாய் மாற்றுகின்றன. சக மனிதர்களோடு வாஞ்சையோடு பேசியும் பழகியும் மகிழ முடியாத நமக்கு அவைகள் ஒரு வடிகால்கள் போல் தோற்றம் தருகின்றன.
            ஹாஸ்டலில் ஒரு அறையைப் பகிர்ந்து கொள்வதில், நான்கைந்துப் பேராக வாடகையைப் பகிர்ந்து வாழும் குடியிருப்புகளில் அனுசரித்து வாழப் பழகிக் கொள்ளும் நமக்கு ஒரு குடும்பமாக கூட்டுக் குடும்பக் கண்ணியில் பிணைந்து போக முடியாத அவலச் சுவையின் வெளிப்பாட்டை இது போன்ற நிகழ்ச்சிகள் நம்மிடம் காட்டிக் கொண்டேதான் இருக்கப் போகின்றன.
            நுகர்வு கலாச்சாரத்தை முன்னெடுப்பதில், தவணை முறை பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வதில், கல்வியை வணிகச் சரக்காக்கி அதன் பலன்களை வேலை வாய்ப்புகளாக உறிஞ்சிக் குடிப்பதில் முன்னேறியிருக்கும் நாம், சக மனிதர்களைப் புரிந்து கொள்வதில் பின்தங்கி இருக்கிறோம்.
            ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதில் இன்னும் நாம் பெயில் மார்க்கிலே இருக்கிறோம். மனதோடு நெருங்கிப் பேசுவதில் இன்னும் வறுமைக் கோட்டை தாண்டாமல் இருக்கிறோம். ஒரு நிமிடம் உட்கார்ந்து பேசினால் எவ்வளவோ மாற்றங்கள் நிகழும். அதற்கு நேரமில்லாமல் ஓடிக் கொண்டே, எப்படியாவது நேரம் ஒதுக்கி விரைந்து வந்து பிக் பாஸ் பார்க்க துடித்துக் கொண்டு இருக்கிறோம்.

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...