24 Jul 2017

ஓயாது அலையும் மனம்

ஓயாது அலையும் மனம்
            "நாள் முழுவதும் அவன் அப்படியே அமர்ந்து இருக்கிறான். அவன் மனதில் ஓராயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருக்கின்றன. ஒரு மாத்திரையைப் போட்டு உறங்கினால்தான் அவைகள் நிற்கின்றன."
                        - எஸ்.கே.யின் நாவல் ஒன்றிலிருந்து...
            இன்றைய நவீன மனிதனின் மனம் ஓயாது அலைந்து கொண்டிருக்கிறது என்பதை எஸ்.கே.யின் மேற்கண்ட வரிகள் கனகச்சிதமாக நிறுவி விடுகின்றன.
            பேருந்தில் பயணிக்கும் ஒருவர் ஓரிடத்தில்தான் அமர்ந்திருக்கிறார். ஆனால் அவர் பல இடங்களுக்குப் பயணித்துக் கொண்டிருக்கிறார். மனம் ஏறத்தாழ அந்த நிலையில்தான் இருக்கிறது. நம்மிடம் இருப்பது போல ஒரு பாசாங்கை நிகழ்த்தி விட்டு அது அலைந்து கொண்டு இருக்கிறது.
            மனம் அலைந்து கொண்டிருக்கும் வேகத்தைப் பார்த்தால் அது நம் மனம்தானா? நம்மிடமில் அந்நியன் ஒருவன் உருவாக்கிய மனமோ? என்ற சந்தேகம் உண்டாகி விடுகிறது.
            அலைவது மனதின் இயல்பு. நம் கட்டுபாட்டோடு அலையும் வரை எந்தப் பிரச்சனையும் பெரிதாகத் தெரிவதில்லை. தன் போக்கில் அது அலைய ஆரம்பிக்கும் போதுதான் மனதுக்குள் விபரீத சமிக்ஞைகள் உருவாகின்றன.
            மனதின் அலைச்சல்களைப் புரிந்து கொள்ள முடியாத நிலையைக் கடக்கும் போது பித்து நிலைக்கு ஆளாகி விடுகிறான் மனிதன். தன் மனதைத் தானே புரிந்து கொள்ள முடியாத ஒரு மனிதனின் தோல்வி அடைந்த நிலை அது.
            இந்த மனம் நிற்காதா? கொஞ்சம் உட்கார்ந்து இளைப்பாறாதா? இந்த மனதை ஓட விட்டவர்கள் சத்தியமாக அவரவர்கள்தான். ஏன் ஓடவிட்டோம் என்ற முடிச்சு அவிழாத வரை அலையும் கடலாக இருக்கும் மனம் ஆழ்கடலாக ஆவதில்லை.

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...