பேச்சுகள்
"எங்களையும்
ஏன் உபயதாரராகச்
சேர்த்துக் கொள்ளவில்லை?"
என்பவன்
எந்தத் திருவிழாவிலும்
எதையும் செய்யாதவன்.
"ஒரு வார்த்தை
என்னிடம் சொல்லி இருக்கலாம்!"
என்பவன்
எந்தப் பிரச்சனைக்கும்
எப்போதும் முன் நிற்காதவன்.
"கேட்டால் கொடுத்திருப்பேன்!"
என்பவன்
எப்போதும் எதற்காகவும்
பைசா காசை
பாக்கெட் தாண்டி எடுக்காதவன்.
"நம்ம கையில
என்னங்க இருக்கு?"
என்று பேசுபவன்
ஏனென்று தெரியாமல்
எத்தனையோ குடும்பங்களைக்
கெடுத்தவன்.
"இதோ! இப்போவே முடிச்சிடலாம்!"
என்பவன்
எந்தக் காரியத்திலும்
எந்தக் காரியத்தையும்
முடிக்க விடாதவன்.
எப்படியோ இவர்களுக்கென
வார்த்தைகள் கிடைத்து விடுகின்றன.
அதைக் கேட்பதற்கென
தோதாக நமது காதுகளும்
கிடைத்து விடுகின்றன.
சகிக்க முடியாத இவர்களின்
வார்த்தைகளைச்
சகித்துக் கொள்வதே
நமது உச்சபட்ச
சகிப்புத்தன்மையாக
ஆகி விடுகிறது.
*****
No comments:
Post a Comment