7 Dec 2016

பாசப் பைத்தியங்கள்


அதிகமாதல்
இறந்து போய் விட்டதாக
சொன்ன மரண அறிவிப்பிற்குப் பின்
இன்னும் அதிகமானது
அதுவரை அவரிடம்
காட்டாமல் இருந்த
அன்பும் மரியாதையும்!
*****

மிகப்பெரிய வேலை
சந்திக்கச் செல்லும் நேரங்களில்
டீ குடித்தபடியே இருக்கிறார் அதிகாரி!
அவருக்கு வேலை அதிகம் என்று
பேசிக் கொள்கிறார்கள்.
சிறிது நேரம் கழித்து
வேலை நெருக்கடி என்று
"உஷ்" கொட்டவும் செய்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும்
சந்தித்துச் சந்தித்தே
வெறுத்துப் போன மனிதர்கள்
காற்றில் ரகசியமாய்க்
கசியவிட்டுப் போகிறார்கள்
ஒரு வேலையும் இல்லாமல்
இத்தனை டீ குடிப்பது
மிகப்பெரிய வேலை என்று!
*****

நினைப்புகள்
ஒரு பிரசவத்தில்
மூன்று குழந்தைகளுக்குத் தந்தையானவன்
மகிழ்ச்சியாகச் சிரிக்கிறான்.
"மூன்றென்ன முப்பது கூட பிறக்கும்!"
அவனுக்குப் பிறந்தால்தானே!"
என்று கேலி பேசிச் சிரிக்கிறான்
அவன் உயிர் நண்பன் ஒருவன்,
கருத்தரிப்பு மையத்தில்
பிறந்த குழந்தைகள் என்பதை
கோடிட்டுக் காட்டுவதாக
நினைத்துக் கொண்டு!
*****

பாசப் பைத்தியங்கள்
சைக்கோ என்பது புரியாமலே
டாக்டர் மாப்பிள்ளைக்கு
கட்டிக் கொடுத்து விடுகிறார்கள்.
எல்லாம் முடித்த
நான்கு மாதத்திற்குள்
கேரள வைத்தியசாலையில் பைத்தியமாய் இருக்கும்
மகளைப் பார்த்து விட்டு
எதுவும் சொல்ல முடியாமல்
"மாப்பிள்ளை நல்லவர்தான்" என்று
முணுமுணுத்தபடியே
கண்ணீர் சிந்தியபடியே வெளியே வருகிறார்கள்
மகளைப் பெற்ற
அப்பாவி அப்பாக்கள்
பாசப் பைத்தியங்களாய்!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...