4 Apr 2024

அந்தக் காலத்தில் தக்காளியின் விலை அதிகமாக இருந்தது! மற்றும் சில சங்கதிகள்

அந்தக் காலத்தில் தக்காளியின் விலை அதிகமாக இருந்தது!

மற்றும் சில சங்கதிகள்

சிறிது காலத்திற்குள் காய்கறிக் கடைகள் அதிகம் கேட்ட கேள்வி, ‘தக்காளி என்ன விலை?’

கூடிய விரைவில் அடுத்து காய்கறிக் கடைகள் கேட்கப் போகும் கேள்வி, ‘வெங்காயம் என்ன விலை?’

இதுவே வழக்கமாகி விட்டது காய்கறிக் கடைகளுக்கு.

*****

தக்காளி சாஸ் விலை பரவாயில்லை. தக்காளி விலைதான் அதிகமாக இருந்தது அந்தக் காலத்தில். அப்போது தக்காளியைப் பதுக்கிய பதுமுகன் பணக்காரனாகி விட்டான். தக்காளியை வாங்கிய பணக்காரனான விஸ்வேஸ்வரன் ஏழையாகி விட்டான்.

*****

நாட்டில் இஞ்சி விலை, மிளகாய் விலை யாருக்கும் தெரிகிறதா? தெரிவதெல்லாம் நட்சத்திரங்கள். எங்கும் நட்சத்திரங்கள். எதிலும் நட்சத்திரங்கள். இரவில் தெரியும் இந்த நட்சத்திரங்கள் இல்லையென்றால் பகலில் வாழ்க்கை இல்லையோ என்னவோ? நீங்களே ஒரு நட்சத்திரம் படும் மற்றும் படுத்தும் பாட்டைக் கீழே பாருங்கள்.

ஒரு நட்சத்திரம் என்ன பாடு படுகிறது

சூப்பர் நட்சத்திரம் என்ற ஒன்று

நம்பிக்கை நட்சத்திரம் என்ற ஒன்று

உடனடி நட்சத்திரம் என்ற ஒன்று

சுப்ரீம் நட்சத்திரம் என்ற ஒன்று

ஆல் டைம் நட்சத்திரம் என்ற ஒன்று

அல்டிமேட் நட்சத்திரம் என்ற ஒன்று

நட்சத்திரங்கள் நல்ல பெயர் தருபவை

இரவின் திரையில் மட்டும் தெரிபவை

பகலின் வெளிச்சத்தில் காணாமல் போகுபவை

நட்சத்திரங்களுக்காக நாம் ஏன் அலட்டிக் கொள்கிறோம்

மழலையர் பள்ளியில்

டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்

பாடியதன் கோளாறோ என்னவோ!

*****

ஐந்து லட்சத்துக்கு நகை வாங்கிய அகிலா பேருந்தில் ஏறினாள். ஏறிய அரை மணி நேரத்தில் ஐந்து லட்ச நகை அபேஸ் ஆனது. அவ்வளவு ரூபாய்க்கு நகை வாங்கினால் ஏற வேண்டியது பேருந்தில் அல்ல, காரில் என்பதை அவள் தாமதமாகப் புரிந்து கொண்டாள். இப்படி அடிக்கடி பேருந்தில் ஏறினால் ஐந்து லட்ச ரூபாயை நகையை லவட்டலாம் என்பதை அபேஸ் பண்ணியவர் புரிந்து கொண்டார். பேருந்தில் பயணிப்பது குறித்து எதிர்மறையான மனநிலையை இது உருவாக்குமானால் அதற்கு நான் பொறுப்பில்லை. இப்படி நடப்பதெல்லாம் ஏதோ சில சந்தர்ப்பங்களில்தான், எப்போதும் அல்ல என்ற எச்சரிக்கைக் குறிப்பையும் அதனால் சேர்த்தே பதிவு செய்கிறேன்.

*****

இந்த வேலைக்கு எவ்வளவு ரூபாய் கேட்பாய் என்று ரஞ்சிதம் படித்துப் படித்துக் கேட்டாள். உங்களிடம் என்ன கணக்குப் பார்க்கக் போகிறேன் என்றான் சிங்காரம். சரிதான் போ பணத்தைக் கொடுக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள் ரஞ்சிதம். வேலை முடிந்த பிறகு சிங்காரம் கேட்ட தொகை அதிகமாக இருந்தது. ரஞ்சிதம் சிரித்துக் கொண்டே தருவதாகச் சொன்ன தொகையை இன்று வரை கொடுக்கவில்லை.

*****

குமார் எல்லா பொருட்களையும் கடனில் வாங்கி வைத்திருக்கிறான். குமாரின் சந்தோஷமும் நிம்மதியும் பறி போய் விடவில்லை. அவனுக்குக் கடன் கொடுத்தவர்களின் நிம்மதிதான் பறி போய் விட்டது. குமார் அலைபேசியை அணைத்து வைப்பதும் இல்லை. குமாரின் அழைப்பு வந்து விடுமோ என்று அவனுக்குப் பயந்து அலைபேசியை அணைத்து வைப்பவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...