4 Sept 2022

இளையராஜா மதிப்பு மிகுந்த இசையமைப்பாளர்

இளையராஜா மதிப்பு மிகுந்த இசையமைப்பாளர்

தமிழ் இசையில் புதிய மைல்கல்களை உருவாக்கியவர் இளையராஜா. அவரை இசைஞானி என்று அழைத்தார் கலைஞர் கருணாநிதி. இளையராஜாவின் இசை பிடிக்காத தமிழர்கள் கிடையாது.

இளையராஜா தந்த இசைக்காக அவர் கடவுள் ஸ்தானத்தில் வைத்துத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறார். அவரும் ஒரு கடவுள் பக்தர்தான் என்றாலும் அவரின் இசைக்குத் தமிழர்கள் பக்தர்கள்.

இளையராஜாவோடு பணியாற்றுவது குறித்து சில முரண்பாடுகளைச் சில மாதங்களுக்கு முன்பு இயக்குநர் மிஷ்கின் தெரிவித்திருந்தார். என்றாலும் அவர் குறித்தும் அவரது இசை குறித்தும் எந்த விதமான மதிப்புக் குறைவையும் வெளிப்படுத்தவில்லை.

அண்மையில் அம்பேத்கரோடு ஒப்பிட்டு பிரதமர் நரேந்திரமோடி குறித்து இளையராஜா கூறிய கருத்துகள் பெரிதும் விவாதத்திற்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட நியமன எம்.பி. பதவி குறித்தும் கூரிய விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

தமிழ் சினிமாவை வித்தியாசமான முறையில் அணுகும் அஜய் ஞானமுத்து போன்ற இயக்குநர்கள் இளையராஜாவுடன் பணியாற்றுவதில் உள்ள தயக்கங்களைச் சில நேர்காணல்களில் தெரிவித்திருந்தனர்.

தமிழ்ச் சமூகத்தின் சாதிய முகத்தைத் துல்லியமாகப் பதிவு செய்யும் பா. ரஞ்சித் போன்ற இயக்குநர்களும் இளையராஜா குறித்த கருத்துகளை அண்மைக்காலமாக நடுவுநிலையில் நின்று தெரிவித்து வருகின்றனர். இளையராஜாவின் மீது விமர்சனங்கள் இருந்தாலும் அவர் மேல் இருக்கும் மதிப்பைக் குறைத்துக் கொள்ள முடியாது என்பதுதான் அவர்களின் கருத்தாக இருக்கிறது.

இளையராஜாவின் தனிப்பட்ட குணங்கள் எப்படி இருந்தாலும், அவர் அரசியல் பார்வைகள் எப்படி அமைந்தாலும், அவரது ஆன்மிக அனுபவங்கள் குறித்த கருத்துகள் எந்த வகைமையில் இருந்தாலும் தமிழிசைக்கு அவர் தந்திருக்கும் பங்களிப்பும் மதிப்பும் அவரை எப்போதும் மதிப்பு மிகுந்த இசையமைப்பாளராக வைத்திருக்கும்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...