27 Sept 2022

இரண்டு மாபெரும் சொத்துகள்

இரண்டு மாபெரும் சொத்துகள்

உலகில் இரண்டு மிகப்பெரிய சொத்துகள் இருக்கின்றன. அது பணம் சம்பந்தப்பட்டதோ, நகை, நிலம், பங்குகள், பத்திரங்கள் சம்பந்தப்பட்டவையோ, அரசியல், அதிகாரம், செல்வாக்கு சம்பந்தப்பட்டவையோ அல்ல. இரண்டுமே மனிதரோடு, மனிதரோடு மட்டும் சம்பந்தப்பட்டவை.

முதல் சொத்து உடல்நலம். இரண்டாவது சொத்து மனநலம். இந்த இரண்டு சொத்துகளையும் நலத்தோடு வைத்திருந்தால் போதும். இதர சொத்துகள் அனைத்தும் இந்த இரண்டு சொத்துகளின் உப விளைவுதான்.

பணத்தை மிகையாக வைத்துக் கொண்டு உடல்நலமில்லாமல் இருப்பதைச் சொத்தென்று சொல்ல முடியாது என்பதைத்தான் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற தமிழகப் பழமொழி சொல்கிறது.

அதே போல பணத்தை மிகையாக வைத்துக் கொண்டு மனநலம் இல்லாமல் இருப்பதையும் சொத்தென்று சொல்ல முடியாது என்பதை ‘மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்’ என்ற வள்ளுவர் மொழி சொல்கிறது.

உடல்நலம் நோயால் கெடும் போது அதை மீட்டுக் கொண்டு வரும் எதிர்ப்பாற்றல் உடலுக்கு உண்டு. மருத்துவத்துக்கும் உண்டு.

மனநலத்தால் உடல் நலம் கெடுமானால் அதை மீட்டுக் கொண்டு வரும் ஆற்றல் நல்லுணர்வுகளுக்குத்தான் இருக்கிறது.

எவ்வளவு பெரிய ஏமாற்றங்களாக இருந்தாலும், இழப்புகளாக இருந்தாலும், பாதிப்புகளாக இருந்தாலும் நல்லுணர்வோடு இருப்பது உடல்நலம் மற்றும் மனநலம் ஆகிய இரண்டு சொத்துகளையும் காப்பாற்றிக் கொள்வதற்கான இயற்கையான வழிகள்.

இயற்கை நல்லுணர்வு எனும் ஆற்றலோடு இருக்கிறது. நம்மையும் அப்படி இருக்க அறிவுறுத்துகிறது. மனிதர்கள் எத்தனை மரங்களை வெட்டினாலும் மீண்டும் மீண்டும் மரங்களை முளைக்க வைக்கும் நல்லுணர்வுடன் இயற்கை இருக்கிறது. மனிதர்கள் எவ்வளவுதான் இயற்கையை மாசுபடுத்தினாலும் இயன்றவரை அவற்றையெல்லாம் தூய்மைப்படுத்தித் தரும் நல்லுணர்வுடன்தான் இயற்கை இயங்கி வருகிறது.

இயற்கையின் நல்லுணர்வோடு இயற்கையில் தோன்றிய நாமும் இருத்தல் நம்முடைய உடல்நலம் மற்றும் மனநலம் எனும் சொத்துகளைக் காத்துக் கொள்வதற்கான அற்புதமான வழிகள்.

நம்மை ஒருவர் ஏமாற்றிய பின், நமக்கு ஒருவர் துரோகம் செய்த பின் நாம் எப்படி நல்லுணர்வோடு இருக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.

கிராமங்களில் இது போன்ற நிலைமைகளை அசாத்தியமான ஒரு வாக்கியத்தோடு எதிர்கொள்வார்கள். ‘அந்த அளவோடு விட்டதே’ என்பதுதான் அந்த வாக்கியம்.

யாரும் தாமாகத் தேடிச் சென்று ஏமாறப் போவதில்லை. ஒருவர் நம்மை ஏமாற்றும் போது அவர் ஏமாற்றுவதை அறிந்து கொள்ளும் அறிவு இருப்பதற்காகவும் இனிமேல் அப்படி ஏமாறாமல் இருப்பதற்காகப் பாடம் கற்பித்ததற்காகவும் நாம் எப்போதும் நல்லுணர்வோடு இருக்க வேண்டும்.

ஒரு துரோகியிடமும் அவர் தம்மை ஒரு துரோகி என்று நமக்குத் தெரிய வைத்ததற்காகவும் அந்த ஒற்றைத் துரோகத்தோடு அவர் நிறுத்திக் கொண்டதற்காகவும் நாம் நல்லுணர்வோடு இருக்க வேண்டும்.

நீங்கள் எப்படிப் பார்த்தாலும், எவ்வளவு ஆழ்ந்து யோசித்தாலும் நாம் நல்லுணர்வோடு இருப்பதற்கான சந்தர்ப்பங்களையே இயற்கை அதிகம் உருவாக்கித் தருகிறது.

பழி வாங்கும் உணர்வுகளை உருவாக்கிக் கொள்வதும், தண்டிப்பதற்கான உணர்வுகளை உருவாக்கிக் கொள்வதும் நாம்தான். இந்த இரண்டு உணர்வுகளுமே போதும் உங்கள் உடல் நலத்தையும் மனநலத்தையும் அழிப்பதற்கு.

உங்கள் நல்லுணர்வுகளை அழித்து நீங்கள் உருவாக்கிக் கொள்ளும் சொத்துகள் உங்களுக்கு எதிரான ஏமாற்றுக்காரர்களையும் துரோகிகளையும் அதிகரித்துக் கொண்டே செல்லும். நீங்களும் உங்கள் பழி வாங்கும் உணர்விலும் தண்டிக்கும் உணர்விலும் உயர்ந்து கொண்டே போவீர்கள். முடிவில் மீள முடியாத உடல் கோளாறாலும் மனக்கோளாறாலும் பீடிக்கப்பட்டு நீங்கள் ஏங்குவது ஒரு நல்லுணர்வு கொண்ட மனிதரின் அன்புக்காகத்தான் எனும் போது நீங்கள் ஏன் நல்லுணர்வு கொண்ட ஒரு மனிதராகவே இருந்திருக்கக் கூடாது?

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...