2 Sept 2022

ரொம்ப காஸ்ட்லியான வாழ்த்து

ரொம்ப காஸ்ட்லியான வாழ்த்து

அண்ணன் சித்தார்த்தன் அண்மையில் விற்பனை விளம்பரம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் இயற்கையான ஆற்றுமணல் 900 கிராம் ரூ. 290 என்று விலை குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒரு கிலோ என்றால் 290 + 29 = 319 ரூபாய். தரமான திருநெல்வேலி அல்வாவுக்குக் கொடுக்க வேண்டிய விலை.

நாட்டில் ஆற்றுமணலும் அல்வாவும் ஒன்றாகி விட்டதை அறிந்து ஆற்றங்கரை நாகரிகத்தில் ஆற்றுமணலோடு பிறந்த நாம் பெருமைப்பட்டுக் கொள்வதா? அல்லது வெள்ளி தேக்கரண்டியோடு பிறந்த பணக்கார வீட்டுப் பிள்ளைகளைப் போல விலையுயர்ந்த ஆற்றுமணலில் பால்யத்தைக் கழித்த எங்கள் இளமைக் காலத்தை நினைத்துப் புளங்காகிதம் கொள்வதா?

இணையதளத்தின் மூலமாக எதை வேண்டுமானாலும் விற்க முடிகின்ற மற்றும் வாங்க முடிகின்ற கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆற்றுமணலும் அப்படி விற்பனைக்கு வரத் துவங்கி விட்டது. இதைப் பற்றிச் சொல்வதென்றால், முன்பு மணல் மாபியாக்கள் செய்ததை இப்போது இணைய மாபியாக்கள் செய்யத் துவங்கி விட்டது என்று சொல்வதா?

ஒரு லிட்டர் தண்ணீர் இருபது ரூபாய்க்கும் ஒரு கிலோவிற்கும் குறைவான ஆற்றுமணல் 290 ரூபாய்க்கும் விற்பனைக்கு வருவது எதற்கான முன்னறிவிப்பு என்பதை வருங்காலம்தான் சொல்ல வேண்டும்.

“நன்னீர் பஃறுளி மணலினும் பலவே”    (புறநானூறு, 9 : 10)

என்று புறநானூற்றில் நெட்டிமையார் எனும் புலவர் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை வாழ்த்தியிருப்பார். அவரது வாழ்த்தை இன்றைய ஆற்றுமணல் விற்பனைக் காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிகவும் விலை உயர்வாக அதாவது ரொம்ப காஸ்ட்டிலியாகத்தான் வாழ்த்தியிருக்கிறார் இல்லையா.

அந்த மேற்படிக் குறித்துச் சொல்லப்பட்ட விற்பனை விளம்பரம் கீழே. நீங்களும் ஒரு முறை அந்தத் தரமான கொடுமையைக் கண் குளிர மண்ணை வாரித் தூற்றாமல் பார்த்து விடுங்கள்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...