காக்கைகள் டை அடிக்குமோ
காக்காதான் அம்மாவுக்குப் பிடித்த பறவை
நானறிந்து அம்மா சோறிட்டு வளர்த்த ஒரு பறவை
காக்கை மட்டுமே
வெள்ளி செவ்வாய் அமாவாசை
எங்கள் வட்டாரக் காக்கை நல்ல சோறு உண்டு
எல்லா காக்கைகளையும் அம்மாவுக்குப் பிடித்தாலும்
அண்டங்காக்கையைப் பிடிக்காது
அதற்கு ஆணாதிக்க சிந்தனைகள் உண்டோ என்னவோ
அம்மா கா கா என்றால் போதும்
ஒத்த குரலுக்கு மொத்தமாய் திரண்டு வரும்
நான் எவ்வளவு கூப்பிட்டாலும் வராது
உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கும் காக்கைகள்
காக்கா கரைந்தால் விருந்தினர்கள் வருவர் என்பாள் அம்மா
அதற்குப் பசியாய்க் கூட இருக்கலாம் என்பேன் நான்
அட போடா நாம் சோறிட்டா வளர்கிறது என்பாள் அம்மா
பிறகேன் சோறிடுகிறாய் என்றால்
காக்கை நம் முன்னோர்கள் என்பாள்
முன்னோர்களுக்கென்ன இவ்வளவு முடி கருப்பு என்றால்
அது அப்படித்தான் என்பாள்
காக்கைகள் டை அடித்துக் கொள்ளுமோ என்னவோ
நான் கேட்டால் கோபிப்பாள் என்பதால்
யாராவது அம்மாவிடம் கேட்டுச் சொல்லுங்கள்
*****
No comments:
Post a Comment