21 Aug 2022

முதலில் என்ன செய்யத் தோன்றுகிறது?

முதலில் என்ன செய்யத் தோன்றுகிறது?

யாரேனும் ஒருவரைப் பார்த்தால் உங்களுக்கு முதலில் என்ன செய்யத் தோன்றும்? உங்களுக்கு என்று இல்லை, பொதுவாக எல்லாருக்கும் அதுதான் தோன்றும். அதுவும் அவர் ஒரு நோயாளியாக இருந்து விட்டால் நாம் மருத்துவம் படிக்காவிட்டாலும் அநேக மருத்துவ பிரிஸ்கிரிப்சன்கள் நம்மை அறியாமல் நம் வாயிலிருந்து புறப்பட்டு வரும்.

ஒருவரைப் பார்த்தவுடன் அறிவுரை சொல்லத் துவங்கி விடுவது உலகில் இருக்கும் பெரும்பான்மையானவர்களின் அனிச்சை குணம்.

இனிப்பைப் பார்த்தவுடன் எச்சில் ஊறுவதில்லையா? தீயைத் தொட்டவுடன் கையை விலக்கிக் கொள்வதில்லையா? அப்படி ஒரு குணம்தான் யாரைப் பார்த்தாலும் அறிவுரைச் சொல்லத் துவங்கி விடுவது.

ஒருவரைப் பார்த்தால் அவருக்குச் சொல்ல ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு விசயம் இருக்கிறது. அது பெரும்பாலும் அறிவுரைகளாகத்தான் இருக்கிறது. நம் மரபும் பாரம்பரியமும் அப்படி.

இங்கு ஒவ்வொன்றைப் பொருத்த வரையிலும் இப்படி இப்படி இருக்க வேண்டும், இப்படி இப்படி பேச வேண்டும், இப்படி இப்படி செய்ய வேண்டும் என்று நிறைய இத்யாதிகள் இருக்கின்றன.

இந்த இத்யாதிகளின் தாக்கம் அறிவுரைகளின் இருப்பை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.

மூத்தோர் சொல்லை இளையோர் கேட்க வேண்டும் என்ற மரியாதை கலந்த பண்பாடும் நம்மிடம் இருக்கிறது. ‘மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்’ என்பன போன்ற மொழிகள் பிறப்பதற்கு அதுவே காரணமாகிறது.

அப்பா சொல்லை பிள்ளைகள் கேட்க வேண்டும் என்ற சமூக எதிர்பார்ப்பும் இங்கு இருக்கிறது. ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்பன போன்ற உச்சாடன மொழிகளையும் அது உருவாக்குகிறது.

இப்படியே பார்க்கப் போனால் வயதால் மூத்த ஒருவர் வயதால் இளைய இன்னொருவருக்கு அறிவுரை சொல்வதற்கான தகுதி இங்கு இயல்பாகவே சீனியாரிட்டி முறை போல வகுக்கப்பட்டிருக்கிறது.

அது தவிரவும் விசயம் தெரிந்த ஒருவர் விசயம் தெரியாத ஒருவருக்கு அறிவுரை சொல்லலாம் என்ற முறையும் ஏற்கப்பட்டிருக்கிறது. அந்த முறையைப் பின்பற்றி முருகபெருமான் பிரம்மனை அடி பணிய வைப்பதும் தந்தைக்கு ஓம் என்ற பிணரவ மந்திரத்தை உபதேசம் செய்வதும் நடக்கிறது.

நம் உபதேச மரபின் பின்னணியை மேலும் வலுப்படுத்தும் வகையில் திருக்குறள், நாலடியார், ஆத்திசூடி, நல்வழி, உலகநீதி போன்ற நூல்களும் அமைகின்றன.

எல்லாரும் நல்லபடி வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பின் வடிகாலாக அமைவது அறிவுரை சொல்லும் குணம்தான். நம் சமூகச் சூழலில் அனைவரும் நல்ல வண்ணம் வாழ வேண்டும் என்ற குணமானது உட்பொதிவாக நம்மை அறியாமல் பொதிந்துள்ளது. அதனால் நம்மால் யாரைப் பார்த்தாலும் அறிவுரை சொல்லாமல் இருக்க முடியாது.

அந்தப் பழக்க வழக்கத்தின் எச்சத்தின் காரணமாக கேட்காதவர்கள் என்றில்லை, காது கேட்காதவர்களிடமும் அறிவுரை சொல்ல வைத்து விடுகிறது.

ஒரு வாயும் இரண்டு காதுகளும் இருப்பது நிறைய அறிவுரைகள் கேட்பதற்காக இருக்கலாம். இரண்டு காதுகளும் ஒரு வாயும் இருப்பது குறைவாக அறிவுரைகள் சொல்வதற்காகவும் இருக்கலாம்.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...