தரம் முக்கியம் மக்களே!
தியேட்டரில் முண்டியடித்து,
டெக்கை வாடகைக்கு எடுத்து, அப்படியே காலப் போக்கில் திருட்டு விசிடி அப்புறம் திருட்டு
டிவிடி வாங்கி மெனக்கெட்டுத் திரைப்படம் பார்த்த காலம் போய் விட்டது. கேபிள் டிவியில்
எளிமையாகப் படம் பார்க்கத் தொடங்கி இன்று மொபைலில் நினைத்த நேரமெல்லாம் படம் பார்க்கும்
காலத்திற்கு வந்தாயிற்று.
காசை ரொம்ப செலவு பண்ணி படம்
பார்க்க வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இப்போது இல்லை. நேரடியாகவோ அல்லது திருட்டுத்தனமாகவோ
இலவசமாக டவுன்லோட் செய்து பார்க்கக் கூடிய வகையில் ஏராளமான திரைப்படங்கள் கிடைக்கின்றன.
இலவசமாகக் கிடைக்கின்றன என்பதற்காக
மக்கள் எல்லா படங்களையும் பார்க்கிறார்களா என்ன? ஒரு திரைப்படம் நல்ல திரைப்படம் எனத்
தெரிந்தால் மட்டுமே இலவச டவுன்லோட் முயற்சியில் இறங்குகிறார்கள். இலவசமாகக் கொடுத்தாலும்
இப்படி ஒரு சோதனையா என்றால் நிச்சயமாக அப்படித்தான்.
நாட்டில் இலவசமாகக் கொடுக்கப்படும்
பொருட்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். அங்காடியில் அரிசி இலவசம். அந்த இலவச அரிசி
படும் பாட்டைப் பார்த்தால் மக்கள் தரத்தை எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பதை அறிந்து
கொள்ளலாம்.
இலவசமாகக் கிடைக்கும் அரிசியைக்
கிடைக்கும் விலைக்கு விற்கிறார்கள். ஐந்து ரூபாயில் ஆரம்பித்து பத்து ரூபாய் வரை விலை
போகும் இலவச அரிசியை வாங்குவதற்கென்று சிலர் இருக்கிறார்கள்.
இலவச அரிசியை விலை கொடுத்து
வாங்குபவர்கள் அதை இட்டிலி மாவாகத் தயார் செய்கிறார்கள். ஐந்துக்கும் பத்துக்கும் அங்காடி
அரிசியை விற்ற மக்கள் அந்த இட்டிலி மாவை இருபது ரூபாய், முப்பது ரூபாய் என்று பாக்கெட்டின்
சைசுக்குத் தகுந்தாற் போல விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.
மற்றும் சில இலவச அரிசியை
விலை கொடுத்து வாங்கும் குழுவினர் அதைப் பொடித்து வளர்ப்பு மீன்களுக்கு உணவாக்குகிறார்கள்.
அவர்கள் வளர்த்த வளர்ப்பு மீனை மக்கள் பிறகு கிலோ இருநூறு, முந்நூறு என்று விலை கொடுத்து
வாங்கிக் கொள்கிறார்கள்.
நாட்டில் இலவசக் கல்வி படும்
பாட்டையும் நீங்கள் பார்க்கலாம். அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது.
பாடப்புத்தகம் இலவசம், புத்தகப் பை இலவசம், நோட்டுகள் இலவசம், சீருடைகள் இலவசம், காலணிகள்
இலவசம். படிப்புக்கு எந்த விதமான கட்டணமும் கிடையாது. இவ்வளவுக்கும் மேல் மதிய உணவும்
வழங்கப்படுகிறது.
இலவசமாகக் கிடைக்கும் இடங்களில்
மக்கள் முண்டியடிக்க வேண்டும் அல்லவா. பல அரசுப் பள்ளிகள் போதிய மாணவர்களின் சேர்க்கை
இல்லாமல் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றன.
இடையில் வந்த கொரோனா காலத்தில்
கையில் புழங்கிய காசு குறைந்த போது அரசுப் பள்ளிகளை நோக்கி திரும்பிய பெற்றோர்கள் தற்போது
கையில் காசு புழங்கத் தொடங்கியதும் அங்கிருந்து தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளுக்கு
மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இலவசம் என்பதற்காக மக்கள்
எதையும் ஏற்றுக் கொள்வதில்லை. இலவசமாகக் கொடுப்பதிலும் ஒரு தரத்தை எதிர்பார்க்கிறார்கள்.
அந்தத் தரம் இல்லையென்றால் அதை மக்கள் ஏற்றுக் கொள்வது சிரமம்தான்.
இலவசமாகப் பொருட்களைக் கொடுப்பவர்களும்
அதைத் தரமாகக் கொடுக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை என்ற உணர்வு நிலைக்குச் சென்று
விட்டார்கள். மக்களும் தரமற்றுக் கிடைக்கும் இலவசப் பொருட்களை எப்படிப் பயன்படுத்திக்
கொள்ள வேண்டும் என்ற ஒரு வித உச்சபட்ச அறிவு நிலைக்குச் சென்று விட்டார்கள்.
*****
No comments:
Post a Comment