18 Feb 2022

விலங்குலக மனிதர்கள்

விலங்குலக மனிதர்கள்

அழைப்பொலிகளின் மேல் வெறுப்பு வந்து நாளாகி விட்டது

சொந்த விதிகளுக்காகப் பொது விதிகளை தளர்த்தக் கோருபவர்கள்

மழைக்காலக் கொசுக்களைப் போல அதிகமாகித்தான் விட்டார்கள்

அவரவர் காரியம் அவரவர்க்கு மலையெனப் பெரிதாகையில்

பொது காரியம் துரும்பெனச் சிறிதாகி விடுகிறது

ஊர்த்தாகம் தணிவதினும்

ஒற்றை மனிதரின் தாகம் தணிவது முக்கியம் என்பது

அதிகாரத் தாண்டவத்தின் சாட்சியம்

பொதுவாகப் பொது விதிகள் மற்றவர்களை மிரட்டுவதற்காக

மற்றும் அவர்கள் மட்டும் மீறுவதற்காக

கூச்ச நாச்சமின்றி சுயநலம் பேசுவோர்

அடுத்தவர்களை அம்மணமாய் அலைய விடுவதை

அற்புதமான வேடிக்கையென விளம்புகிறார்கள்

யார் எக்கேடு கெட்டுப் போனாலென்ன

அவர்கள் நலமொன்றே உலக நலமாகி விடுவதாக

அவர்கள் அருமையாகப் பிரசங்கிக்கிறார்கள்

தனக்கென ஊளையிடும் ஓநாய்கள் உலகமெங்கும் இருக்கின்றன

என்றாலும் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை

விலங்குலகத்தில் ஒன்றான மனிதருலகத்தில்

ஒரு மனிதரை உலகம் அரிதாக எப்போதாவது சந்திக்கத்தான் செய்கிறது

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...