1 Jan 2022

பருவம் தப்பும் மழை – பசியைப் பார்த்தால் பயிர் விளையுமா?

பருவம் தப்பும் மழை –

பசியைப் பார்த்தால் பயிர் விளையுமா?

            இப்படி மழை கொட்டித் தீர்க்கும் என்று யார் எதிர்பார்த்திருப்பார்கள்? போன வருடமும் இதே சம்பவம்தான். மார்கழியையும் தை மாதத்தையும் ஒரு வழி செய்து விட்டது.

            இப்படி மழை பெய்தால் அது சம்பாவை அம்போ என்றாக்கி விடும். போன வருடம் இதே போன்ற மழையில் சம்பா நெல்லை கரையேற்றுவதற்குள் பட்ட பாடு சொல்லி மாளாது. இயந்திரம்தான் அறுக்கிறது. இருந்தாலும் மழை பெய்யாமல் இருந்தால்தான் காய வைக்கின்ற வேலை கம்மியாக இருக்கும். இல்லையென்று நெல்லைக் காய வைப்பதற்குள் பெண்டு நிமிந்து விடும்.

            இப்படிப்பட்ட நேரத்தில் கை அறுப்பென்றால் நினைத்துப் பார்க்கவே கஷ்டம்தான். இதை விட கனமழைக் காலமான குறுவைப் பட்டத்தில் கை அறுப்பு அறுத்தே நெல்லைக் கரை சேர்த்திருக்கிறார்கள். அது அந்தக் காலம். இந்தக் காலத்தில் அது முடியாது. அவ்வளவு பாடுபடுவதற்கு மனித உடலில் தெம்பும் இல்லை. அவ்வளவு பாடுபடுவதற்கு மனித மனதில் ஆர்வமும் இல்லை.

            சம்பா அறுப்புக்கு வருவதற்கு முன்பே வயலில் உளுந்து பயிறு அடித்து விடுவதுண்டு. நம் ஊர் பெரிய மிராசு பம்பரத்தான் எட்டு ஏக்கர் வயலில் உளுந்தை அடித்திருப்பதாகச் சொன்னார். அத்தனையும் இந்த மழையில் பாழ்தான். நாங்கள் கொஞ்சம் தப்பித்தோம் என்றுதான் சொல்ல வேண்டும். தப்பித்தோம் என்றால் உளுந்து அடிக்காமல் தப்பிப்பித்ததாக நினைத்துக் கொள்ள வேண்டாம். ஒன்றரை ஏக்கர் அடித்ததொடு நிறுத்திக் கொண்டோம். அதற்குள் மழை வந்து மேற்கொண்டு அடிக்க வேண்டாம் என்பது போலச் சொல்லி விட்டது.

            இந்த மழை பெய்தவற்கு முன் நடந்த ஒரு சம்பவத்தைச் சொன்னால் நீங்கள் சிரித்து விடுவீர்கள். அப்போது வயலில் தண்ணீர் இல்லை. ஆளாளுக்கு மேலிடத்துக்குத் தகவல் சொல்லி ஆற்றில் தண்ணீர் விட பிரயத்தனம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு பத்து நாள் முயற்சிக்குப் பிறகு ஆற்றில் கரை புரண்டாற் போல் தண்ணீர் வந்தது.

            ஆற்றில் வந்து பிறகு வாய்க்காலில் வந்த தண்ணீரை வயலில் வைப்பதற்கு ஆளாளுக்குப் போட்டா போட்டி. பம்பரத்தானுக்கு இருப்பு கொள்ளவில்லை. மடையைத் திறந்து வைத்து விட்டு வயலில் இருக்கும் வரப்பே கதி என்று கிடந்தார். அங்கோ இங்கோ நகர்ந்தால் வெட்டி வைத்த மடையை யாரேனும் அடைத்து விடுவார்களோ என்ற தவிப்பு அவருக்கு. அதற்கென்று காலையிலும் சாப்பிடாமல் மதியமும் சாப்பிடாமல் பிற்பகல் வரை உட்கார்ந்திருக்க முடியுமா?

வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துக் கொண்டு கொடுக்க யார் இருக்கிறார்கள்? பிள்ளைகளையெல்லாம் பெரிய படிப்பு படிக்க வைத்து நகரத்துக்கு வேலைக்கு அனுப்பி விட்டார். எல்லா பிள்ளைகளும் வீடு வாசல் வாங்கி நகர்குடிகளாக மாறி விட்டனர். வீட்டில் இடுப்பு தேய்ந்து கிடக்கும் பொண்டாட்டியைப் பம்பரத்தான்தான் தூக்கி நிமிர்த்திச் சாப்பாடு போட வேண்டும். பம்பரத்தானின் நிலைமை இப்படி. ஒரு நாள் சாப்பாட்டைப் பார்த்தால் வயலில் தண்ணீர் பாயாது என்று பசியை மறந்து பொண்டாட்டியை மறந்து பம்பரத்தான் வரப்பில் உட்கார்ந்தது உட்கார்ந்ததுதான்.

            வரப்புகளில் வந்தவர்கள், போனவர்கள் பம்பரத்தானிடம் சொல்லிப் பார்த்தார்கள், “சாப்பிட்டு வந்து தண்ணீர் பாய்ச்சுங்களேன் ஆண்டை!” என்று. மனிதப் புத்தி கேட்க வேண்டுமே?

            “ அடப் போங்கடா! நீங்கள் உங்கள் வழியைப் பார்த்துக் கொண்டு!” என்று வைது வைத்தார் பம்பரத்தான். அதற்கு மேல் வருவோரும் போவோரும் நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.

            பம்பரத்தானுக்கு எழுபத்தைந்துக்கும் எண்பதுக்கும் இடைப்பட்ட வயது இருக்கும். எவ்வளவு நேரம்தான் வயிறு ஆகாரம் இல்லாமல் தாங்கிக் கொண்டிருக்கும். வரப்பில் உட்கார்ந்திருந்த பம்பரத்தான் கண்ணுக்கு அகப்படவில்லை என்ற போது மக்கள் அங்கும் இங்கும் தேடிப் பார்த்தார்கள்.

            பம்பரத்தான் வரப்பிலிருந்து உருண்டுப் போய் வயலில் பிரக்ஞையின்றி விழுந்து கிடந்தார். பசி மயக்கம் அவரை வயலில் உருட்டித் தள்ளியிருந்தது. பிறகென்ன ஆளாளுக்கு அடித்துப் பிடித்துக் கொண்டு தகவல் சொல்ல தெருவிலிருந்து அதே வேகத்தில் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடினர்.

            தூக்கிக் கொண்டு வரும் வழியில் ஆளாளுக்குச் சாப்பிட்டு வரச் சொன்னதைப் பம்பரத்தானுக்கு நினைவு படுத்தி ஆதங்கப்பட்டுக் கொண்டனர். “உங்களுக்கு என்னடா…” என ஆரம்பித்து அதன் தொடர்ச்சியாகப் பம்பரத்தான் பேசியதை சொற்களில் எழுத முடியாது. அத்தனையும் காது கொடுத்து கேட்க முடியாத வசவுச் சொற்கள்.

            இப்படியெல்லாம் வயலில் தவமாய்த் தவம் கிடந்துதான் விவசாயிகள் நெல்லைக் கரையேற்றுகிறார்கள். இந்த மழை இப்படிக் கொட்டினாலும் அதையும் பொறுத்துக் கொண்டுதான் நம்பிக்கையோடு அறுவடைக்குச் செல்கிறார்கள்.

            இந்த மழை இப்போதைக்குக் கொஞ்சம் விட்டால் சம்பா மற்றும் தாளடி அறுவடை நல்லபடியாக முடிந்து விடும். மழை கேட்க வேண்டுமே! மழைப்பேறும் மகப்பேறும் மகாதேவன் அறியாத ரகசியமாக அல்லவா இருக்கிறது!

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...