வெடிக்கும் போழுதில் பறப்பது நிச்சயம்
கலப்பது சுலபம் பிரசவம் கடினம்
வளர்வது வெளியேறுகையில்
பிரியங்களை உடைந்தெறிந்து
விட்டு வெளியேறுவதைப் போல
முட்டையின் ஓட்டைத் தகர்க்க
வேண்டியிருக்கிறது
சிறு மூட்டைக்குள் வளர்ந்த
பிராணியா
சீறிப் பாய்ந்து கொத்துகிறது
என்றால்
முட்டை உடையும் போதே
விழித்துக் கொள்ளாத அறிவை
எண்ணி ஆறுதல் கொள்
அன்பென்பது படிப்படியாக இன்பமாக
வளர்ந்து
முடிவில் துன்பத்தில் சென்று
கலக்கிறது
உயரத்தை இழக்கும் அருவி தரையில்
தவழத்தான் வேண்டும்
தலையில் விழும் மழைத்துளி
காலடியில் கரைந்தோடத்தான் வேண்டும்
தொடங்குவதன் சுலபத்தை முடிவிலும்
எதிர்பார்க்க முடியாது
முடிவின் கடினத்தை எண்ணித்
தொடங்காமலும் இருக்க முடியாது
விதி வலியது எனின் வாழ்க்கை
அதனினும் வலியது
பருந்தின் கால்களில் இருப்பது
குறித்தோ
பஞ்சாரத்தில் இருப்பது குறித்தோ
கோழிக்குஞ்சு அறியாது
தாய்ப்பறவை சிறகடித்து ஆற்றாமையில்
தவிக்கும்
முன்னொட்டும் பின்னொட்டும்
போடும் மனம் தகர்ந்து விட்டால்
வாழ்க்கை பஞ்சாரத்தில் அடைந்து
பஞ்சாரத்தோடு பறக்கும் கோழிக்குஞ்சு
*****
No comments:
Post a Comment