24 Dec 2021

பறவைகளை விரும்பினால் மரங்களை நடுங்கள்

பறவைகளை விரும்பினால் மரங்களை நடுங்கள்

மரங்களின் இருப்புக் குறித்த கவலையின்றி

பறவைகள் பறந்து கொண்டிருக்கின்றன

மரங்கள் இருந்தால் தரையிறங்கும்

இல்லாது போனால் வானக்கிளைகளில் சிறகடித்துக் கொண்டிருக்கும்

விதைகள் முளை விடுவதற்கான தளங்களைக்

காங்கிரீட் களங்கள் அடைத்துக் கொண்டிருக்கின்றன

அவ்வபோது விழும் பறவைகளின் எச்சங்கள்

வீணாய் விழுந்து கொண்டிருக்கின்றன

பறவைகள் எங்கும் நிற்காமல் பறப்பது குறித்து

யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை

பறவைகள் அவசரப்பட்டுத் தரையிறங்கினால்

பிடிசோறு வைக்க வேண்டுமோ என்ற

அச்சத்தில் இருக்கிறார்கள் மனிதர்கள்

பறவைகளோ

கடந்த காலத்தின் மனிதர்களை மறந்து போயிருக்கின்றன

நிகழ்கால மனிதர்களை அச்சத்தோடு விலக்குகின்றன

எதிர்கால மனிதர்கள் குறித்த எண்ணம் பறவைகளுக்கு இல்லை

ஒருவேளை மனிதர்கள் பறவைகளை விரும்பினால்

தூரத்தில் இருந்தபடியே விரும்புங்கள்

முடியுமானால் மரமொன்றை நட்டு வையுங்கள்

நீங்கள் நட்டு வைத்த மரத்தின் மேல்

பறவைகள் அமர்வது என்பது உங்கள் மேல் அமர்வதாகும்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...