கைவிடப்படுதல்
சீரற்ற சுவாசத்தோடு எத்தனை
நாட்கள் இருப்பது
உள்ளிழுத்த மூச்சை வெளியிடுகையில்
நடக்கத் தடுமாறும் வயோதிகரைப்
போலத் தள்ளாடுகிறது
எழுவதெல்லாம் எதிர்மறை எண்ணங்களாகி
வசவுகளை விசும்பியபடி ஒவ்வொரு
நாளும் விடிகிறது
ஒவ்வொரிடமும் வைத்திருந்த
நம்பிக்கை
வெடி வைத்துத் தகர்க்கப்பட்ட
கல்குவாரியைப் போலச்
சின்னாபின்னமாகிக் கிடக்கிறது
முன்னுக்குப் பின் முரணாக
நடக்கும் மனிதர்களால்
குளத்தை மூடும் வெங்காயத்
தாமரைப் போல
மனமெங்கும் அவநம்பிக்கைப்
பெருகிக் கிடக்கிறது
இனி அவர்கள் என் இறுதிச்
சடங்கிற்கு வந்தால் போதும்
எல்லாரும் என்னைக் கைவிட்ட
பிறகு
என் உடலும் என்னைக் கைவிடுகிறது
நோய்மையின் பிடியில் தள்ளி
நரக வேதனையை வாரி வழங்குகிறது
உடலில் துயருற ஏதேனும் ஒரு
பகுதி இருந்தால்
அதை வழங்குவதில் ஆர்வமாக
இருக்கிறேன்
காசற்ற பொழுதில் வரும் நோய்ப்பாடு
வைத்தியத்தைத் திருப்தி செய்யாது
*****
No comments:
Post a Comment