கடவுளைக் கண்டு கொண்டவளும் கண்டு கொள்ளாத கடவுளும்
கடைசி வரை திருப்தி வராமல்
அங்குமிங்கும் அலைக்கலைந்தபடி
பூஜை புனஸ்காரங்களைச் செய்து
கொண்டிருப்பாள்
இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு
எதிலும் அக்கறையில்லை என்று
அடிக்கடி முணுமுணுத்துக் கொள்வாள்
பூஜையறையின் கடவுளர்கள்
காதைப் பொத்திக் கொள்வார்களோ
என்னவோ
சம்பிரதாயத்தில் சிறிது பிசகு
என்றாலும்
வசவுச் சொற்களை கண்டபடி விசிறி
எறிவாள்
“எல்லாம் நான் இருக்கிற வரைதான்
போ
நான் இல்லாத காலத்துக்கும்
சேர்த்து
இப்போதே செய்து விடுகிறேன்
நீதான் கடவுளே இவர்களைக்
காப்பாற்றி வைக்க வேண்டும்”
என்பதை ஒரே மூச்சில் சொல்லி
முடிப்பாள்
அவள் இல்லாத நாட்களில்
விஷேச நாட்கள் சாவகாசமாகக்
கடந்து செல்லும்
கடவுளர்கள் பெரிதாகக் கோபித்துக்
கொண்டதாய்த் தெரியவில்லை
என்பதை “நானில்லாமல் எதாவது
ஒழுங்காக நடக்கிறதா?”
என்றபடி வீட்டுக்குள் நுழையும்
அவளிடம் எப்படிச் சொல்வது
அவள் அப்படி இருப்பது அவள்
வணங்கும்
கடவுளின் இஷ்டமாக இருந்து
விட்டுப் போகட்டும்
*****
No comments:
Post a Comment