10 Dec 2021

சிருஷ்டியின் பிரசவம்

சிருஷ்டியின் பிரசவம்

ஜீவன் ததும்பும் கதையை எழுத முயற்சிக்கும் போதெல்லாம்

மொழியின் சாத்தியங்கள் விலகிக் கொண்டே செல்கின்றன

தொட்டு விடும் தூரத்தில் இருக்கும் தொடுவானத்தைப் போல

தொடங்கும் கணங்கள் ஏமாற்றியபடி கைவிட்டுச் செல்கின்றன

உணர்வும் மொழியும் கைகோர்க்கும் தருணங்கள்

அபூர்வமாய் வாய்க்கும் போது

கையிலிருக்கும் எழுதுகோல் கானல் நீரைப் போல மறைந்து போகிறது

வானவில்லைத் தோற்றுவிப்பதைப் போல

வண்ணத்துப் பூச்சியொன்று கையில் வந்து அமர்வதைப் போல

எழுத ஆகும் காலம் உருக்கொள்ளும் கருவினின்று

பிரசவம் ஆகும் காலத்தை ஒத்தபடி நீள்கிறது

காட்டுப் பூக்களின் மகரந்தமும்

தோட்டத்துப் பூக்களின் சூல்களும் சந்திக்க முடியாத தூரத்தில்

கடலலையும் கடற்கரையும் போல உள்வாங்கிச் செல்ல செல்ல

தரைதட்டி நிற்கும் எழுத்து கைவிடப்பட்ட கலங்கரை விளக்கமாய்

எழுதுவதற்கு என்ன இருக்கிறது எனத் தேமென அழுகிறது

எழுதுவதின் மாயக்கரங்கள் தீண்டி அதுவாக எழுதிக் கொள்கையில்

வானவெளியில் இரும்புத்துண்டு பஞ்செனப் பறப்பதைப்போல

இலகுவாக இருக்கிறது அதிசயத்தைக் கையில் ஏந்தி கொள்வதைப் போல

சிருஷ்டி பிரசவம் நேர்ந்து விட்டதா என்று கேட்பதை விடுத்து

பிரசவமாகி விட்ட சிருஷ்டி உங்களைச் சந்திக்காமல் போகாது என்பதில்

எப்போதும் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளுங்கள்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...