9 Nov 2021

அனைத்திற்குமான முதன்மையான தகுதி பொறுமை

அனைத்திற்குமான முதன்மையான தகுதி பொறுமை

            அவசரப்படுவது எவ்வளவோ தவறான முடிவுகளைக் கொண்டு வந்து சேர்க்கிறது. பொறுமையாக இருப்பதன் மூலமாகத் தவறான ஒன்றையும் சரியாக மாற்ற முடிகிறது. நிலைமை அப்படிதானா என்பதை அவசரப்படுபவர்களால் அறிய முடியாது. அதற்குக் கொஞ்சம் பொறுமையாக இருப்பது தேவைப்படுவதால் நிஜமாகப் பொறுமையாக இருந்து பார்ப்பதால்தான் இந்த உண்மையை அறிய முடியும்.

பொதுவாக எதற்கும் அவசரப்பட்டு உடனுக்குடன் பிரதிவினை ஆற்றாமல் இருப்பது தேவை என்பதை உணர்வதற்குள் வயது கடந்து விடும். எதற்கும் உடனுக்குடன் பிரதிவினை ஆற்றாவிட்டாலும் ஒவ்வொன்றுக்கான பதிலும் எதிர்வும் பொறுமையாக வந்தடைகின்றன என்பது ஒரு பேருண்மை. அவசரத்தின் மூலமாக செய்யப்படுவது எல்லாம் சாதாரணப் பிரச்சனையைப் பெரும் பிரச்சனையாக ஆக்கி விடுகின்றன என்பதை அவரவர்கள் அவரவர்களாகத்தான் உணர்ந்து கொண்டால்தான் நன்றாக இருக்கும்.

            சூழ்நிலையை ஆழமாகப் புரிந்து கொள்ள பொறுமையாக இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது என்பதுதான் பொறுமையின் பின்னுள்ள அவசியமும் தாத்பர்யமும். பொறுமையாக இல்லாவிட்டால் புரிதல் இன்றி வினையாற்றிக் கொண்டிருக்க வேண்டிய சுழற்சியில் சிக்க வேண்டி இருப்பதை உணர்வதற்கான ஒரு சம்பவமாவது எல்லாரது வாழ்விலும் நிகழ்ந்திருக்கும். இதன் காரணமாகத்தான் எல்லாவற்றுக்குமான முதல் தகுதியாக பொறுமையை மட்டும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

            பொறுமை என்ற ஒரு தகுதி இருந்து விட்டால் போதும் இன்னபிற எந்த விதமான தகுதியும் தேவையற்றதாகி விடுகிறது என்பதை அடித்துச் சொல்லலாம். பொறுமையே எல்லா தகுதிகளையும் கொண்டு வந்துச் சேர்த்து விடுகிறது என்பதை உரக்க சொல்லலாம். எதையும் அவசரப்பட்டு நிகழ்த்தாமல் பொறுமையாக நிகழ்த்தும் பண்பை மட்டும் வளர்த்துக் கொண்டால் போதும். அது அற்புதம் போல் வாழ்வில் வினையாற்றும். அத்துடன் எல்லாவற்றையும் செய்யும் திறன் தானாக வந்து விடும். அதற்குப் பொறுமை உத்திரவாதம் எனலாம்.

அற்புதமாக வெளிப்பட வேண்டிய திறனை அவசரப்பட்டுத் தவறாகப் புரிந்து கொள்ளும் தன்மை சீரழித்து விடுகிறது என்பதை அறியும் போதுதான் எல்லா திறன்களின் அடிப்படையாகப் பொறுமை இருப்பதைத் தெரிந்து கொள்ள முடியும். பொறுமையாக இருக்க முடியவில்லை என்பதை இனியும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. பொறுமையைப் பழகிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அல்லது கற்றுக் கொண்டாவது கடைபிடிக்க வேண்டித்தான் இருக்கிறது.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...