8 Nov 2021

நிறங்களின் பேரேடு

நிறங்களின் பேரேடு

விளக்குகளின் வெளிச்சத்தில் நிறங்கள் ஏமாற்றுகின்றன

விளக்கு வெளிச்சத்தில் தெரியும் நிறம் ஒன்றாகவும்

சூரிய வெளிச்சத்தில் தெரியும் நிறம் வேறொன்றாகவும் ஆகி விடுகின்றன

நிறங்களை பச்சோந்தி என்பதா

வெளிச்சங்களை பச்சோந்தியின் தாய் என்பதா

ஒரு வண்ண கண்ணாடி சில நிறங்களை உறிஞ்சிக் கொள்கிறது

ஆதிக்க பரம்பரையின் வாரிசுகளைப் போல

வெள்ளை நிறம் எந்த வெளிச்சத்திலும் ஏமாற்றுவதில்லை

கறையைப் பளிச்செனக் காட்டி முகம் சுளிக்க வைத்து விடுகின்றது

கருப்புத் தோலுக்கு வெளிர் நிறமும்

சிவந்த தோலுக்கு அடர் நிறமும்

அம்சமாய்ப் பொருந்திப் போவதாய்ப் பேசிக் கொள்கிறார்கள்

தக்காளி நிறம் போல சிவந்த தோலுடைய ஒருத்தி

கருத்த ஆடவனைக் கைபிடித்து வரும் போது

பொருத்தம் போதவில்லை என அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்

துணிக் கடைகளில் பல வண்ண சேலைகளை

வானவில்லின் லாவகத்தோடு எடுத்துப் போடும் முதியவர்

வெள்ளை வேட்டியும் வெள்ளைச் சட்டையும் அணிந்திருக்கிறார்

வெள்ளை ஒளியிலிருந்து ஏழு நிறங்கள் பிரிவதைப் போல

நிறங்களைச் சட்டெனத் தேர்ந்து விடுவதில்லை மனிதர்கள்

கொஞ்சம் யோசிக்கிறார்கள் மனக்கண்ணாடியில் பார்த்தபடி

நிறைய நிறங்களைத் தேடிப் பார்க்கிறார்கள்

நிறப்பசியோடு அலையும் வேங்கையைப் போல

முடிவில் தேர்ந்து கொள்ளும் நிறம் பிடிக்காத போது

வேறு இடங்களில் தங்களுக்கான நிறங்களைத் தேடுகிறார்கள்

மனிதர்கள் தேடி வரட்டும் என்று வெவ்வேறு நிறங்களைக் காட்டும்

வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாய் இருளும் போது

சலிப்பும் அலுப்பும் அதுவாக ஒரு நிறத்தைத் தேர்ந்து கொள்கிறது

நிறத்தைத் தேர்ந்து கொண்ட பிறகு அது குறித்த பிரக்ஞை அழிந்து போகிறது

யாரோ ஒருவர் சுட்ட வேண்டியிருக்கிறது சூடியிருக்கும் நிறங்களை

*****

No comments:

Post a Comment

திராவிடமா? தமிழ்த் தேசியமா?

திராவிடமா? தமிழ்த் தேசியமா? ஓர் அரசியல் பண்பாட்டு இயக்கத்திற்கான வலுவான அடிப்படை கருத்தியல்தான். அந்தக் கருத்தியல் அடிப்படையில்தான் தங்கள்...