6 Nov 2021

அப்படியொரு எண்ணமிருந்தால் அப்படியே விட்டு விடுங்கள்

அப்படியொரு எண்ணமிருந்தால் அப்படியே விட்டு விடுங்கள்

            வாழ்க்கை அனுபவத்தில் எண்ணம் என்பது ஒரு வித்தியாசமான சக்தியாகத்தான் இருக்கிறது. அது உங்களுக்குள் இருந்தால் அப்படியே இருக்கட்டும். அதுவாக எதையாவது செய்து கொள்ளும். பிறகு அதுவாக மறைந்துப் போகும். உங்களுக்குள் தோன்றி அது உங்களுக்குள் ஒரு முடிவை எட்டிக் கொள்ளும். அதைப் புறத்தே இருந்து மிகைப்படுத்திக் கொள்ளாதீர்கள். கூடுதலாகத் தூண்டி விட்டுக் கொள்ளாதீர்கள்.

            முடியும் என்ற எண்ணம், நடக்கும் என்ற எண்ணம், மாறும் என்ற எண்ணம் என மூவகை எண்ணங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த எண்ணங்களில் இருக்கும் உடன்பாட்டுத் தன்மையால் இவ்வித எண்ணங்களை அதிகமாக உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுவதுண்டு. இயற்கையான ஒன்று இதில் என்னவென்றால் உங்களால் முடியும் என்றால் அதை புறத்தே எண்ணத்தை உருவாக்கிக் கொண்டு தூண்டிக் கொள்ள வேண்டியதில்லை. நடக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும் அப்படியேத்தான். மாறும் என்ற எண்ணத்திற்கும் இது பொருந்தும்.

நீங்கள் இந்த எண்ணங்களில் கூடுதலாக உள்குத்துகளைக் குத்திக் கொண்டிருந்தால் நம்பிக்கையான பாதையினின்று விலகி எதிர்மறையான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பீர்கள். நாட்டில் நம்பிக்கையானவர்கள் என்று சொல்லப்படுபவர்கள்தான் மிக மோசமான அவநம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் அதீதமாக உருவாக்கிக் கொள்ளும் நம்பிக்கையும் அந்த நம்பிக்கையைச் சுற்றி அமைத்துக் கொள்ளும் எண்ணங்களும்தான். நீங்கள் எந்த எண்ணத்தையும் அதீதமாக்கிக் கொண்டால் முடிவில் இதுவே நிகழும்.

உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்டு எண்ணங்களில் எதுவும் செய்யாமல் இருந்தால் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. உங்களால் பிறருக்கும் எந்தப் பிரச்சனையும் இருக்காது. பிறரால் உங்களுக்கும் எந்தப் பிரச்சனையும் இருக்காது. ஏனென்றால் எண்ணங்களின் உலகமானது இப்படி ஒன்றுடன் தொடர்பு கொண்டு பாதிப்பை உண்டு பண்ணக் கூடியது.

மனதில் தோன்றும் ஒவ்வொரு எண்ணமும் ஏகப்பட்ட பிரச்சனைகளை எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் உருவாக்கக் கூடியவை. ஆகவே தேவையின்றி யார் மனதிலும் எந்த எண்ணத்தையும் உருவாக்கிக் கொண்டும் அதற்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டும் இருக்காதீர்கள். உங்கள் மனதிற்குள்ளும் தேவையில்லாத எண்ணங்களை உருவாக்கிக் கொண்டு இருக்காதீர்கள்.

உங்களுக்குத் தேவையான எண்ணங்கள் உங்களுக்குள் இருக்கும். அவரவருக்கும் அப்படியே. நீங்கள் கூடுதலான எண்ணங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கூடுதலான எண்ணங்களை உருவாக்கிப் பிறருக்குத் தர வேண்டிய தேவையும் இல்லை.

அடிப்படையில் எல்லா பிரச்சனைகளும் கூடுதலாக உருவாக்கிக் கொள்ளும் எண்ணங்களால் ஏற்படுவன. பிறகு நீங்கள் கூடுதலாக உருவாக்கிக் கொண்ட பிரச்சனைகளுக்கு உங்கள் எண்ணங்களின் மூலமாக ஒரு தீர்வைத் தேட வேண்டியிருக்கும். அது ஒரு முடிவற்ற பயணம். நீங்கள் தீர்வைத் தேடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். அது எண்ணங்களில் நழுவி நழுவி ஓடிக் கொண்டிருக்கும். நீங்களும் எண்ணங்களின் பின்னால் என்றாவது ஒரு நாள் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ஓடிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.

உங்கள் எண்ணங்கள் மேல் கொள்ளும் நம்பிக்கை அர்த்தமற்றது என்பதைப் புரிந்து கொள்வதற்குள் உங்கள் ஆயுளின் முடிவுப் பகுதியை எட்டியிருப்பீர்கள். எப்போதும் எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்ட மனிதராகவே நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருப்பீர்கள். எண்ணங்கள் ஒவ்வொன்றும் வழிகாட்டிப் பலகைகளைப் போலத்தான். ஒரு வழி தெரிந்து விட்ட பிறகு அதில் நடப்பதற்கான விவேகமானது எண்ணத்தினின்று வேறுபட்டது. எண்ணங்களைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டு போவது என்பது தொடர்ந்து வழிகாட்டிப் பலகைகளாக உருவாக்கிக் கொண்டு போவதைப் போலத்தான். பிறகு அந்த வழிகாட்டிப் பலகைகளின் வழியை எப்படிப் புரிந்து கொள்வது என்பதற்கு தனியொரு வழிகாட்டிப் பலகை வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடலாம்.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...