எழுத்தெனப்படுப சொல்லெனப்படுப
எழுத்தென அறியப்பட்டவரைத்
தேடியிருக்கிறார்கள்
காது கிடைத்திருந்தால் பேசிக்
கொண்டே இருந்திருப்பார்கள்
வாய் கிடைத்திருந்தால் பிரிக்கவொண்ணா
பசையால் ஒட்டியிருப்பார்கள்
மூக்குக் கிடைத்திருந்தால்
உயிர்வளியை உறிஞ்சியிருப்பார்கள்
கண்கள் கிடைத்திருந்தால்
பார்த்த ரகசியங்களைப் பறித்திருப்பார்கள்
உடல் முழுவதும் கிடைத்திருந்தால்
அணுஅணுவாய் இம்சித்திருப்பார்கள்
இறுதியில் கிடைத்ததென்னவோ
மூளையும் இதயமும்
மூளையைப் பிழிய பிழிய ஞானமாய்
வழிந்திருக்கிறது
இதயத்தை நசுக்க நசுக்க அன்பாய்ப்
பிரவகித்திருக்கிறது
இது தேறாது என விட்டுவிட்டுப்
போயிருக்கிறார்கள்
நல்லவேளை எலும்புகள் கிடைக்காமல்
போனதற்காக
நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்
கடவுளுக்கு
சதைகள் கிடைக்காமல் போனதற்காகவும்தான்
இன்னொரு மூளையும் இதயமும்
அற்ற உடலில் பொருத்த
அவர்கள் சொல் எனப்படுபவரைத்
தேடிக் கொண்டிருக்கிறார்கள்
*****
No comments:
Post a Comment