17 Nov 2021

பேரம் பேசும் காசைக் கடவுள் வாங்கிக் கொள்வார்

பேரம் பேசும் காசைக் கடவுள் வாங்கிக் கொள்வார்

            அண்மையில் ஒரு இரு சக்கர வாகனம் வாங்கினேன். எதை வாங்கினாலும் அதில் எவ்வளவு காசை குறைத்து மிச்சம் பார்க்க முடியும் என்ற யோசனை எனக்கு உண்டு. அதற்கேற்ப பேரங்களை வரிந்து கட்டிக் கொண்டு பேசுவதிலும் தனித்த ஆர்வமுண்டு.

            கையில் முழு ரொக்கத்தையும் தருகிறேன் என்று சொல்லி 85,000/- மதிப்புள்ள அந்த இரு சக்கர வாகனத்துக்கு சலுகை விலையைக் கேட்டேன். அவர்கள் ஒரே விலை என்பதில் ரொம்ப நேரம் உறுதியாக இருந்தார்கள். நானும் கொஞ்சம் யோசித்துப் பார்த்து விட்டு வேறு கடையைப் பார்க்கப் போவதாக எழும்ப ஆரம்பித்த போது விற்பனை பிரிவு மேலாளரைக் கேட்டு விட்டுச் சொல்வதாக என்னை உட்கார வைக்கும் வேலையில் இறங்கினார்கள்.

            எவ்வளவு சலுகை கிடைத்தாலும் லாபம்தானே என்று நானும் உட்கார்ந்தேன். என் மனதுக்குள் ரூ. 1000/- க்கான சலுகை ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் வந்தவர்கள் ரூ. 500/- க்கான சலுகையைச் சொன்னார்கள். நான் ஆயிரம் ரூபாய் எதிர்பார்ப்பதாகச் சொல்லி பையிலிருந்து நோட்டுக் கட்டுகளை எடுத்துக் காட்டினேன்.

            அவர்கள் அதற்கு மேல் வாய்ப்பில்லை என்று உதட்டைப் பிதுக்கினார்கள். நான் எழுந்து வேறு கடைக்குச் சென்று விடலாம் என்று எத்தனித்த போது என் மனைவி அந்த நிறுவன வண்டியைதான் வாங்க வேண்டும் என்று உறுதி காட்டியதால் என்னால் அங்கு இங்கு என எங்கும் நகர முடியாமல் போய் விட்டது.

சரி பரவாயில்லை கிடைத்த வரை லாபம் என்று மனைவியின் விருப்பத்திற்காக ஐநூறுக்கான சலுகையை ஏற்றுக் கொண்டு பெட்ரோல் எவ்வளவு நிரப்பித் தருவீர்கள் என்று கேட்டேன். ஒன்றரை லிட்டர் என்றார்கள். நான் டேங்க் முழுவதையும் நிரப்பித் தர கோரிக்கை வைத்தேன்.

அப்படித் தருவதில்லை என்று ஒன்றரை லிட்டரில் நிலைகுத்தி நின்றார்கள். நான் எங்கே எழுந்து விடுவேனோ என்ற யோசனையில் என் மனைவி கெஞ்சும் பார்வையில் ஒரு பார்வை பார்த்தாள். அதற்கு அர்த்தம் வாங்கினால் இந்த நிறுவன வண்டியைத்தான் வாங்க வேண்டும், வேறு நிறுவன வண்டியை வாங்க வேண்டாம் என்பதாகும். பெட்ரோலுக்காக மனைவியின் ஆசையைப் பொசுக்கி விட விருப்பம் இல்லாததால் அதையும் ஒத்துக் கொண்டு எழும்ப தோன்றிய எத்தனிப்பை அடக்கிக் கொண்டு உட்கார்ந்து விட்டேன்.

ஒன்றரை மணி நேரத்திற்குப் பின்பு வண்டி தயாரான போது நான் ஒன்றரை லிட்டர் நிரப்பிக் கொள்வதற்கான சலுகைச் சீட்டைக் கேட்டேன். அது ஏற்கனவே டேங்கில் நிரப்பப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். அது அரை லிட்டருக்கு மேல் இருக்காது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இந்த முறையும் மனைவி கெஞ்சும் தோரணையில் ஒரு பார்வை பார்த்தாள். சரிதான் போ என்று இந்த முறையும் விட்டுக் கொடுத்து விட்டு வண்டியைக் கிளப்பிக் கொண்டு அவளைப் பின்னால் அமர வைத்துக் கொண்டு வண்டியை எடுத்து வந்தேன்.

வண்டியை வாங்கி வீட்டிற்கு வந்ததும் கோயிலுக்குச் சென்று வண்டியைப் பூஜை போட வேண்டும் என்றாள். இதென்ன புதுப்பழக்கம்? வண்டியைக் கொடுக்கும் போதே அங்கிருந்த பிள்ளையார் சிலைக்கு முன் சாவியை வைத்து, எலுமிச்சைப் பழத்தை நசுக்க செய்துதானே கொடுத்தார்கள் என்றேன் நான்.

அது வேறு, இது வேறு, நாம் கோயிலுக்குச் சென்று பூஜைபோட்டுதான் ஆக வேண்டும் என்று உறுதியாக நின்றாள் மனைவி. இதில் போய் முகத்தைத் திருப்பிக் கொண்டு என்னவாகப் போகிறது என்று என் கடந்த கால அனுபவங்களை யோசித்துப் பார்த்து விட்டு சரி என்று சொல்லி விட்டேன்.

இப்போது வண்டி கோயிலை நோக்கிச் சென்றது. இடையில் கடைத்தெருவில் நிறுத்தி வண்டி பூஜை போடுவதற்கு என்று இருநூறு ரூபாய்க்கு என்னென்னவோ சாமான் செட்டுகளை வாங்கிக் கொண்டாள். பூசாரிக்கு முன்பே அலைபேசியில் அழைத்துச் செய்தியைச் சொல்லியிருப்பாள் போல. கோயில்லி பூசாரி தயார் நிலையில் இருந்தார்.

பூஜை புனஸ்காரங்களை வெகு விமரிசையாகச் செய்து சாவியை அம்மன் அருகில் வைத்து நீண்ட நேரம் வேண்டிக் கொண்ட பின் சாவியைக் கொடுத்து சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சைப் பழங்களைக் கொடுத்து வண்டியை எடுக்கச் சொன்னார். நான்கு திசைகளிலும் நான்கு எலுமிச்சைப் பழங்களை குங்குமத்தில் கலந்து வீசினார்.

கிளம்பும் போது மனைவி பூசாரிக்குக் கொடுக்க வேண்டுமே என்றாள். நான் நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன். என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தவள் என்னைக் கேட்காமல் என் சட்டைப் பாக்கெட்டிலிருந்து இன்னும் இருநூறு ரூபாயை எடுத்து முந்நூறாகக் கொடுத்தாள். பூசாரி சந்தோஷமாக வாங்கிக் கொண்டார்.

கோயிலை விட்டு வண்டியை வீட்டுக்கு எடுத்து வந்த போது வண்டிக்குப் பூஜை போடுவது என்றால் முந்நூறு ரூபாய் என்பது தெரியாதா? இப்படி நீங்கள் நூறு ரூபாயைக் கொடுத்தால் பூசாரி நம்மைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார்? என்று என்னைக் கடிந்து கொண்டாள்.

கடவுள் நம்பிக்கை இல்லாத நான் உன் பேச்சைக் கேட்டுக் கொண்டு கோயிலுக்கு வந்திருக்கவே கூடாது என்றேன் நான். நான் இப்படிச் சொன்னதும் வண்டி வாங்கும் போது அப்படி இப்படி என்று பேசி ஐநூறு ரூபாயை மிச்சப் படுத்தினீர்களே, அதைக் கொடுத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள் என்றாள் என்னைச் சமாதானம் செய்யும் நோக்கோடு. கடந்த கால அனுபவங்கள் மீண்டும் கண் முன் வந்து நின்ற போது இதற்காகச் சண்டையை வளர்க்க மனமில்லாமல் அடக்கம் அமரருள் உய்க்கும் என்று அடக்கிக் கொண்டேன்.

இப்படியாக கஷ்டப்பட்டு பேரம் பேசி மிச்சம் பண்ணிய ஐநூறு ரூபாய் காசு பூஜை சாமான்கள் வாங்க இருநூறும், பூசாரியின் கையில் முந்நூறும் என்றும் போய் சேர்ந்தது.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...