4 Nov 2021

சக்கரங்கள் சுழலும் பாதை

சக்கரங்கள் சுழலும் பாதை

கடக்கும் பாதையெங்கும் அனாதைகளாய்

ஓணான்கள் செத்துக் கிடக்கின்றன

ஆங்காங்கே அணில்களும் அகதிகளாய்

ஆதரிப்பாரின்றி அடிபட்டுக் கிடக்கின்றன

நடுசாலையில் வரையப்பட்ட ஓவியம் போல

பாம்புகள் செத்த சுவடுகளும் கண்ணில் படுகின்றன

விபத்துப் பகுதி என்றெழுதப்பட்ட பலகையை

படிக்காமல் கடந்து கொண்டிருக்கும்

நாய்களோடும் ஆடுகளோடும்

படித்தபடிக் கடக்கும் மனிதர்களும்

அவ்வபோது அடிபட்டுப் போகின்றனர்

எப்போதோ நிகழும் ஒரு துர் மரணம்

சில நாட்கள் வேகத்தை மட்டுப் படுத்தினாலும்

கூடிய விரைவில் வேகம் கொண்டு விடுகின்றன

வேகமாய்ச் சுழல்வதற்கெனப் பிறப்பெடுத்த சக்கரங்கள்

ஒவ்வொரு சக்கரமும் கொன்றழிக்கும்

உயிர்களை நினைத்து தூக்கமிழந்து தவிக்கிறார்

ஆதியில் சக்கரத்தைக் கண்டறிந்தவர்

நீயின்றிப் போனாலும்

வேறொருவர் கண்டுபிடித்துதான் ஆக வேண்டும் என்று

தூக்கமிழந்தவருக்கு நிரந்தர தூக்கம் தர

கழுத்தைக் குறி வைத்து ஆணைச் சக்கரத்தை ஏவுகிறார் கடவுள்

தர்மத்தின் பாதையைக் குருதியில் நனைத்தபடி

சுழன்றபடிப் போகின்றன வழியில் படுபவைகளை

அடிபடாமல் காக்க முடியாத சக்கரங்கள்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...