26 Nov 2021

ஒரு மழைக்கு ஓராயிரம் கொசுக்கள்

ஒரு மழைக்கு ஓராயிரம் கொசுக்கள்

            சாதாரண மழைக்கே இங்கு கொசுக்குள் பெருகி விடும். அவற்றைச் சாதாரண கொசுக்கள் என்று சொல்லாம். கனமழைக்குச் சொல்லவே வேண்டியதில்லை. அவை கனமான கொசுக்கள். நீங்கள் ஒவ்வொரு கொசுக்களையும் பார்க்க வேண்டுமே. மரபணு மாற்றம் செய்யப்பட்ட வீரியமான ராட்சச கொசுக்களைப் போல இருக்கும்.

            காலையில் கடிக்கும் கொசுக்கள், மதியத்தில் கடிக்கும் கொசுக்கள், மாலையில் கடிக்கும் கொசுக்கள், இரவில் கடிக்கும் கொசுக்கள் என்று பலவிதமான கொசுக்கள் இங்கு இருக்கின்றன. மருத்துவ விஞ்ஞானத்தைக் கேட்டால் மலேரியா கொசு, டெங்கு கொசு, சிக்கன் குன்யா கொசு, யானைக்கால் கொசு என்று பலவற்றைச் சொல்வார்கள்.

            மழைக்காலம் தொடங்கி விட்டால் வீட்டைச் சுற்றி தண்ணீரைத் தேங்க விடாதீர், தண்ணீர் தேங்காதவறு பழையப் பொருட்களை அகற்றுங்கள் என்ற அறிவிப்பைத் தமிழகமெங்கும் கேட்கலாம். பிறகு மழைக் கொஞ்சம் தீவிரமானால் வீட்டைச் சுற்றிலும் சாலைகள்தோறும் தேங்கி நிற்கும் நீரை நீங்கள் ராட்சச மோட்டர்களை வைத்துதான் உறிஞ்சி வெளியேற்ற வேண்டும். சமயத்தில் வீட்டைச் சுற்றி நிற்கும் தண்ணீரால் வீட்டை விட்டு படகுகளில் வெளியேற வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். இப்படியெல்லாம் இருந்தால் அது கொசுக்களுக்குக் கொண்டாட்டம்தானே. அந்தக் கொண்டாட்டத்தின் விளைவாகக் கொசுக்கள் வகைதொகையில்லாமல் பெருகுகின்றன.

            இந்தியாவில் வறுமையை ஒழிப்பது ஒரு பெரிய விசயமாகப் பேசப்படுகிறது. உண்மையில் கொசுக்களை ஒழிப்பதுதான் பெரிய விசயமாகப் பேசப்பட வேண்டும். அகில இந்திய பிரச்சனைகளிலும் கொசுக்கள் முதன்மையான இடத்தைப் பெறும். இங்குப் பரவியிருக்கும் கொசுக்களைப் பார்க்கையில் திட்டமிட்டு ஆராய்ச்சி செய்து வளர்த்துப் பெருக்கி இருக்கிறார்களோ என்றுதான் எண்ணத் தோன்றும்.

            மனிதரைக் கடித்து விட்டு பயமில்லாமல் திரியும் அதிர்ஷ்டம் கொசுக்களுக்குத்தான் வாய்த்திருக்கிறது. எல்லா பூச்சிகளையும் அடித்துத் துரத்தும் மனிதர்கள் கொசு ஒன்றிற்கு மட்டும்தான் பயந்து கொசுவலைக்குள் புகுந்து கொள்கிறார்கள்.

            கொசுவர்த்திச் சுருள் வாங்கி வைத்துக் கொள்வதோ, கொசுவை விரட்டும் கொசுவிரட்டிகளை வாங்கி வைத்துக் கொள்வதோ, வீட்டைச் சுற்றி கொசுவலையை அமைத்துக் கொள்வதோ இந்தியாவில் அவரவர் வசதியைப் பொருத்த விசயங்கள் என்பதால் கொசுவைக் கட்டுப்படுத்துவது குறித்து யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதாகத் தெரிவதில்லை. மழைக்காலங்களில் அதுவாகப் பெருகிக் கொள்ளும், கோடைக்காலங்களில் அதுவாக குறைந்து கொள்ளும் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

            ஆனால் கொஞ்சம் சுகாதாரமாகச் சுற்றுப்புறங்களையும் நீர் நிலைகளையும் பேணினால் கொசுக்களின் பெருக்கம் கட்டுபாட்டோடுதான் இருக்கும். என்ன செய்வது பேணுதல் என்பது நம் மக்களுக்குப் பிடிக்காத ஒன்றாக ஆகி விட்டது. அதையெல்லாம் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசாங்கத்தின் கடமை என்றே இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நினைப்பினாலேயே எங்கெங்கும் கொசுக்களை நீக்கமற நிறைந்திருக்க செய்திருக்கிறார்கள் நம் மக்கள்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...